பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடியும் வரை மின்சார நிறுத்தம் செய்ய வேண்டாம்: அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின்சார நிறுத்தம் ஏதும் செய்ய வேண்டாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், எதிர்வரும் கோடை காலத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சார விநியோகம் வழங்குவது குறித்து அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி உள்ள நிலையில், தேர்வு காலம் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் அமைச்சர் அறிவுறுத்தினார். மின் பகிர்மான வட்டங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்து, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி சரிசெய்வதற்கும், அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். மின்னகம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், பொதுமக்கள் அனைவருக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடியும் வரை மின்சார நிறுத்தம் செய்ய வேண்டாம்: அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: