×

சலூன் கடைக்காரர் தீக்குளித்து சாவு

விருத்தாசலம், மார்ச் 1: விருத்தாசலம் புதுக்குப்பம் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் பழமலை மகன் துரைராஜ்(48). இவர் ஜங்ஷன் அருகே மெயின் ரோட்டில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ரேவதி மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு துரைராஜ் சலூன் கடையை மூடிவிட்டு கடைக்கு எதிரே அதே பகுதியைச் சேர்ந்த ரமணன் என்பவர் நடத்தி வந்த தள்ளுவண்டி டிபன் கடையில் டிபன் சாப்பிட்டுள்ளார். அப்போது சாப்பிட்டதற்கு சரியான தொகை தராமல் குறைவாக துரைராஜ் தந்துள்ளதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இரவு துரைராஜ் வீட்டிற்கு தூங்க சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று காலை ரமணன், அவரது மனைவி மற்றும் உறவினர் சிவா ஆகியோருடன் துரைராஜ் வீட்டிற்கு சென்று அவரை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் துரைராஜ் செய்யும் தொழிலையும், அவரது மனைவி மற்றும் மகளையும் கேவலமாக பேசி இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட துரைராஜ் நேற்று காலை கடையை திறந்தவுடன் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார். தொடர்ந்து தனது கடையின் முன் நின்று கொண்டு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைப்பதற்குள் உடல் முழுவதும் எரிந்து பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் விருத்தாசலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post சலூன் கடைக்காரர் தீக்குளித்து சாவு appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Durairaj ,Palamalai ,Manikkavasakar Street, Pudukkuppam, Vridthachalam ,Revathi ,
× RELATED மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு