×

வைரம் அணிந்தால் தோஷமா?

நன்றி குங்குமம் தோழி

நவரத்தினங்களின் ராஜா என்றால் அது வைரம்தான். சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் வைரக்கற்கள் பட்டை தீட்டப்பட்ட பிறகுதான் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது. இதில் சிறிய கல் மூக்குத்தி முதல் நெக்லஸ், கம்மல், வளையல், ஒட்டியாணம், ஜடை பில்லை வரை அனைத்து டிசைன்களும் கிடைக்கின்றன. வைரங்கள் அணிந்தால் தோஷம் என்ற நிலை மாறி, ஒரு வைர நகையாவது நம்மிடம் இருக்க வேண்டும் என்று இன்றைய தலைமுறை பெண்கள் விரும்புகிறார்கள்.

‘‘வைரம் அணியும் போது நமக்கும் பாசிடிவ் வைப்ரேஷன்தான் ஏற்படுமே தவிர அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது’’ என்கிறார் உம்மிடி பங்காரு நகைக் கடையின் நிர்வாக இயக்குனர் அமரேந்திரன் உம்மிடி. இவர் ஒரு வைரத்தினை எவ்வாறு வாங்க வேண்டும், அதனை பராமரிக்கும் முறை, அவை அணிவதால் தோஷம் ஏற்படுமா? போன்றவற்றைப் பற்றி விவரிக்கிறார்.
‘‘வைரம் பூமியில் இருந்து எடுக்கப்படும் சாதாரண மஞ்சள் நிறப் பாறாங்கல். எந்தவித பளபளப்பும் இருக்காது. இது இயற்கையான முறையில் பூமிக்கு அடியில் உருவாகும் கல் என்பதால், அதில் நீரோட்டம், கரும்புள்ளி மற்றும் விரிசல்கள் எல்லாம் இருக்கும். அதை நீக்கி பட்டைத் தீட்டினால்தான் அழகான வடிவம் பெறும்.

வைரத்தில் மிகவும் முக்கியமானது 4C. இதனைக் கொண்டுதான் வைரத்தின் தரத்தினை அளவிடுவார்கள். 4C என்பது கட் (cut), கலர் (colour), கிளாரிட்டி (clarity), ேகரட் (carat). கட் என்பது வைரத்தினை பட்டைத் தீட்டும் முறை. முழுமையாக பட்டைத் தீட்டப்பட்ட வைரம்தான் கட் டயமண்ட். அடுத்து கலர், ஆங்கில எழுத்தின் வரிசையில் இதன் நிறங்கள் கணக்கிடப்படுகிறது. அதில் முதல் தரமான வைரம் வெள்ளை நிற வைரம். அதனைத் தொடர்ந்து பிரவுன், மஞ்சள், பிங்க் ஏன் கருப்பு நிறங்களிலும் வைரங்கள் உள்ளன.

கிளாரிட்டி, கரும்புள்ளி, கீரல், விரிசல் இல்லாமல் தூய்மையினை குறிக்கும். கடைசி C, கேரட். வைரத்தின் அளவினை கணக்கிட பயன்படுத்துவது. இந்த நான்கு Cக்களை உலகளவில் தரமான முறையில் கணக்கிடக்கூடிய ஆய்வுக்கூடம் GIA. இது அமெரிக்காவில் உள்ளது. இவர்கள் வைரத்தின் 4C தரத்தினை கணக்கிட்டு சான்றிதழ் அளிப்பார்கள். இந்த சான்றிதழ்களை வைரங்களை நகைகளில் பதிய வைக்கும் முன்பே பெறவேண்டும். வைரம் நகைகளில் பதித்த பிறகு அதன் தரத்தினை 20%தான் கணக்கிட முடியும். காரணம், அதன் பெரும்பாலான பகுதி நகைக்குள் பதிக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு பதிக்கப்பட்ட வைரத்தின் மேல் பகுதி மட்டுமே ஆய்வு செய்ய முடியும். வைரத்தின் கீழ் பகுதியில் பாதிப்பு இருந்தால் அதன் தரத்தினை கணக்கிட முடியாது.

பலர் நகைகளை வாங்கும் போது கட்டண ரசீது வேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால் தங்கமோ அல்லது வைரமோ எந்த நகையாக இருந்தாலும், அதற்கான கட்டண ரசீதினை பெறுவது அவசியம். காரணம், அதில் நகையின் எடை மற்றும் வைரத்தின் எடை அனைத்தும் குறிப்பிட்டு இருக்கும். இது நாம் அந்த நகையை ரீசேல் செய்யும் போது, அதற்கு ஏற்ப விலையினை நிர்ணயிக்க முடியும். மேலும் நகைகளில் வைரக்கற்களின் எடை பதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

அதில் பதிக்கப்பட்டு இருக்கும் கல்லின் எடையும், கட்டண ரசீதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் எடையும் சரியாக உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். கடைசியாக நாம் பார்க்க வேண்டியது நகைக்கடை. குறிப்பிட்ட சில கடைகள்தான் பல ஆண்டுக் காலம் நீடித்து நிலைத்து இருக்கும். மேலும் அவர்கள் மற்ற கடைகள் போல் நகைகளை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய மாட்டார்கள். காரணம், தங்கத்திற்கு மார்க்கெட் விலை என்று ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அதற்கு ஏற்பதான் நகைகளின் விலை மாறுபடும்.

அதிக அளவு தள்ளுபடியில் நகையினை விற்பனை செய்யும் போது தங்கம் அல்லது வைரம் தரமானதாக இருக்காது. அதனால் எப்போதுமே நகைக் கடையின் நம்பகத்தன்மையை பார்ப்பது அவசியம். வைரம் வாங்கும் போது அதில் கரும்புள்ளிகள் இருந்தால் நாம் தோஷம் என்று ஒதுக்கிவிடுகிறோம். சில கற்களில் கரும்புள்ளிகள் தென்படும். அதனை நாம் விரும்புவதில்லை. மேலும் ஒரு சிலர் தங்களின் குடும்பத்திற்கு வைரம் பெருந்தாது என்பார்கள்.

நல்ல கற்களை தேர்வு செய்து வாங்கும் போது அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. வைரம் என்றுமே பாசிடிவ் எனர்ஜியினைதான் வெளிப்படுத்தும் என்பதால், இதில் இருந்து வெளியாகும் ஒளி நமக்குள் ஒரு பாசிடிவ் வைப்ரேஷனை கொடுக்கும். நகைக்கடைகளில் கண்டிப்பாக ரத்தினங்கள் குறித்து அறிந்தவர்கள் இருப்பது அவசியம். அவர்களுக்கு ரத்தின கற்கள் பற்றி முழுவிவரம் தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வைரம் அல்லது மற்ற ரத்தினங்கள் குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டால் அதனை தெளிவுபடுத்துவது ஒவ்வொரு நகை விற்பனையாளர்களின் கடமை.

இப்போது சிந்தடிக் வைரங்களும் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது. இவை செயற்கை முறையில் ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்படுகின்றன. வைரம் உற்பத்தியாக தேவைப்படும் மினரல்களை செலுத்தி சிந்தடிக் வைரங்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்கான ரீசேல் மதிப்பு கிடையாது என்றாலும் பார்க்க ஒரிஜினல் வைரம் போலவே மின்னும் தன்மைக் கொண்டது. அடுத்து போல்கி வைரங்கள். வைரங்கள் பட்டைத் தீட்டப்படும் போது சிதறும் துகல்கள்தான் ேபால்கி வைரங்கள்.

இதில் நகைகள் வடிவமைக்கப்படுகின்றன என்றாலும் இதற்கான ரீசேல் மதிப்பு குறைவு. பராமரிப்பு தங்கம், வெள்ளி, பிளாட்டினங்களில் தான் வைர நகைகளை பொருத்த முடியும். எந்த ஒரு நகையாக இருந்தாலும் அதை அணிந்த பிறகு அதன் மேல் சென்ட் அல்லது மேக்கப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. காரணம், தங்கத்திற்கு இவை எதிரி என்பதால், அது வைரத்தையும் பாதிக்கும். வைர நகைகளை அணிந்த பிறகு அதை ஒரு ஈரத்துணியில் துடைத்து பிறகு ஒரு பருத்தி துணியில் சுற்றி டப்பாவில் போட்டு பீரோக்குள் பாதுகாப்பாக வைக்கலாம்.

சிலர் பேங்க் லாக்கரில் வைத்திருப்பார்கள். அவ்வாறு வைக்கும் போதும் ஒன்றோடு ஒன்று உரசாமல் தனித்தனி டப்பாவில் போட்டு வைத்தால் வைரம் மட்டுமில்லை தங்க நகையும் தன் பொலிவினை இழக்காது’’ என்று ஆலோசனை மட்டுமில்லாமல் வைர நகைகள் குறித்து முழு விவரங்களை யும் பகிர்ந்தார் அமரேந்திரன் உம்மிடி.

தொகுப்பு: நிஷா

The post வைரம் அணிந்தால் தோஷமா? appeared first on Dinakaran.

Tags : navaratms ,Dinakaran ,
× RELATED தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய...