×

தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர் குறைவாக இருப்பதால் பாபநாசம் அருகே வழுத்தூரில் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்

தஞ்சாவூர் பிப் 28: பாபநாசம் தாலுகா வழுத்தூர் கிராமம் ஹாஜியார் தெருவில் குரங்குகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. குறிப்பாக நகர் பகுதியை விட அருகில் உள்ள கிராமங்களில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சென்று மக்களுக்கு வெகுவாக தொல்லையை ஏற்படுத்தி வருகிறது. குடியிருப்பு பகுதிக்கு வந்து குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இவை வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்கள், செல்போன்களை தூக்கி செல்கின்றன. மரங்களில் ஏறி அட்டகாசம் செய்கின்றன. சாலையில் அங்கும், இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் குரங்குகள் விரட்டுகின்றன.

மேலும் ஓட்டு வீட்டின் மேல் அமர்ந்து ஓடுகளை கீழே தள்ளி விடுகின்றன. இதனால் அடிக்கடி வீட்டை பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கேபிள் ஒயர்களை பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடும் குட்டிக் குரங்குகளால் எலக்ட்ரானிக் சாதனங்கள் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் டேபிளில் வைக்கப்பட்டுள்ள டிவிக்கள் கீழே விழுந்து உடைந்து விடுகின்றன. அதுமட்டுமின்றி மின்வயர்கள், வெயிலில் காயவைக்கப்பட்ட துணிகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்துகின்றன. அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கொண்டு வரும் உணவுகளை பாய்ந்து பிடுங்கி செல்கின்றன.

இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். வீடுகளுக்குள் ஆள் இல்லாத நேரமாக புகுந்து பருப்புகள், மளிகை பொருட்களை வாரியிறைத்து வீணாக்குகின்றன.மேலும் தேங்காய், காய்கறிகள் போன்றவற்றை இழுத்து சேதப்படுத்துகின்றன. மளிகைகடைகள், பெட்டிக்கடைகளில் அசந்த நேரத்தில் புகுந்து தின்பண்டங்களை எடுத்துக் கொண்டும், கீழே தள்ளியும் குரங்குகள் செய்யும் தொல்லைகள் மக்களை வெகுவாக பாதித்து வருகிறது. அட்டகாசம் செய்யும் குரங்குகளால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். சிறு குழந்தைகள் வீட்டின் வாசலில் நின்றால் திடீரென்று மேலிருந்து குதித்து குழந்தைகளின் உடைகளை பிடித்து இழுக்கின்றன. இதனால் குழந்தைகள் பயந்து அலறி ஓடி கீழே விழுந்து அடிப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர் குறைவாக இருப்பதால் பாபநாசம் அருகே வழுத்தூரில் வீடுகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Kallanai canal ,Vachthur ,Papanasam ,Thanjavur ,Hajiyar street ,Vaghtur ,Babanasam taluk ,Vachtoor ,Dinakaran ,
× RELATED பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 100...