ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் மும்பை, பரோடா

மும்பை: ரஞ்சி கோப்பை அரையிறுதியில் விளையாட மும்பை, பரோடா அணிகள் தகுதி பெற்றுள்ளன. காலிறுதி ஆட்டங்களில் சவுராஷ்டிராவுக்கு எதிராக 3வது நாளிலேயேவெற்றியைப் பதிவு செய்த தமிழ்நாடு அணியும், ஆந்திராவுக்கு எதிராக 4வது நாளில் 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற மத்திய பிரதேச அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. அதே சமயம், விதர்பா – கர்நாடகா மற்றும் மும்பை – பரோடா அணிகளிடையே நடந்த காலிறுதி ஆட்டங்கள் கடைசி நாள் வரை இழுபறியாக நீடித்தன.

நாக்பூரில் விதர்பா – கர்நாடகா அணிகளிடையே நடந்த முதல் காலிறுதியின் முதல் இன்னிங்சில் விதர்பா 460 ரன், கர்நாடகா 286 ரன் எடுத்தன. 2வது இன்னிங்சில் விதர்பா 196 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 372 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா, 4வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்திருந்தது. மயாங்க் அகர்வால் 61, அனீஷ் 1 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

மயாங்க் 70, அனீஷ் 40 ரன், விஜயகுமார் 34, கவெரப்பா 25 ரன்னில் வெளியேற கர்நாடகாக 243 ரன்னில் சுருண்டது. 127 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற விதர்பா அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் ஹர்ஷ் துபே, ஆதித்யா சர்வதே தலா 4 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவினர். சர்வதே ஆட்ட நாயகன் விருது பெற்றார். மும்பை பந்த்ரா குர்லா வளாகத்தில் நடந்த 2வது காலிறுதியன் முதல் இன்னிங்சில் மும்பை அணி 384 ரன்னும், பரோடா 348 ரன்னும் குவித்தன.

36 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 4ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 379 ரன் எடுத்திருந்தது. தனுஷ் கோடியன் 32, துஷார் தேஷ்பாண்டே 23 ரன்னுடன் நேற்று 5வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். எதிரணியின் பொறுமையை சோதித்த இருவரும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சதம் விளாசியதுடன் 10வது விக்கெட்டுக்கு 232 ரன் சேர்த்து சாதனை படைத்தனர். மும்பை அணி 2வது இன்னிங்சில் 569 ரன் குவித்து ஆல் அவுட்டானது (132 ஓவர்). துஷார் 123 ரன் (129 பந்து, 10 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார்.

தனுஷ் 120 ரன்னுடன் (129 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். பரோடா தரப்பில் பார்கவ் பட் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதைத் தொடர்ந்து 606 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் துரத்தலை தொடங்கிய பரோடா 30 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. எனினும், முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

* அரையிறுதி எப்போது?
ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 2ம் தேதி தொடங்குகின்றன. முதல் அரையிறுதியில் விதர்பா – மத்தியபிரதேசம், 2வது அரையிறுதியில் மும்பை – தமிழ்நாடு அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் இடங்கள் இன்னும் முடிவாகவில்லை.

* ‘வால்’ பசங்களின் வரலாற்று சாதனை

* ரஞ்சி அரையிறுதியில் மும்பை அணியின் 10வது மற்றும் 11வது பேட்ஸ்மேன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 232 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் இருவருமே சதம் விளாசி அசத்தியது, ரஞ்சி கோப்பையில் வரலாற்று சாதனையாக அமைந்தது. ரஞ்சி போட்டியின் ஒரே இன்னிங்சில் கடைசி 2 வீரர்களும் சதம் விளாசுவது இதுவே முதல் முறையாகும்.

* முதல் தர கிரிக்கெட்டில் தனுஷ் – துஷார் ஜோடியின் சாதனை 2வது இடம் பிடித்துள்ளது. முன்னதாக, 1946ல் லண்டன் ஓவல் மைதானத்தில் சர்ரே – இந்தியா அணிகள் மோதிய போட்டியில் இந்தியாவின் கடைசி விக்கெட் ஜோடி சாந்து சர்வதே 124* ரன்னும், ஷுடே பாணர்ஜி 121 ரன்னும் விளாசி சாதனை படைத்தனர்.

* தனுஷ் – துஷார் 232 ரன் சேர்த்ததும் ரஞ்சி வரலாற்றில் 2வது சிறந்த கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. முன்னதாக, 1991-92 ரஞ்சி சீசனில் மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த அரையிறுதியில் டெல்லியின் அஜய் ஷர்மா – மனிந்தர் சிங் இணை மும்பைக்கு எதிராக 223 ரன் குவித்தது முதலிடத்தில் உள்ளது.

* முதல் தர கிரிக்கெட்டில் தனுஷ், துஷார் இருவருக்குமே இது முதல் சதமாகும். இருவருமே தலா 129 பந்துகளை சந்தித்ததும், தலா 10 பவுண்டரிகளை விளாசியதும் ஆச்சரியமான ஒற்றுமையாக அமைந்தது.

The post ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் மும்பை, பரோடா appeared first on Dinakaran.

Related Stories: