×

சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி!

நன்றி குங்குமம் தோழி

சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது. தினமும் கம்பு, கேழ்வரகு, தினை, வரகு போன்றவற்றில் சாதம், களி அல்லது கஞ்சி என சாப்பிட்டு வந்தார்கள். காலம் மாற நாம் அரிசி சாப்பாட்டிற்கு நம்மை பழக்கப்படுத்திக் கொண்டோம். ஆனால் இன்றைய தலைமுறையினர் அரிசி சாப்பாட்டையே தவிர்த்து பீட்சா, பர்கர் மட்டுமில்லாமல்… நாவின் சுவையினை தூண்டக்கூடிய பலவித துரித உணவுகளையே விரும்புகிறார்கள்.

மேலும் சிறுதானிய உணவுகளை சமைக்கும் நேரம் அதிகம் என்பதால், அதனை நம்மில் பலர் தவிர்த்து வருகிறார்கள். இதைப் புரிந்துகொண்டு பலர் சிறுதானியங்களை பொடி, மாவு வடிவத்தில் மதிப்பு கூட்டும் உணவுப் பொருளாக மாற்றி வருகின்றனர். அதனை நாம் தோசையாகவோ அல்லது சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இந்த வரிசையில் சிறுதானியத்தில் முசிலி போன்ற காலை சிற்றுண்டிகளை அறிமுகம் செய்துள்ளனர் கோவை மாவட்டத்தை சேர்ந்த அனுஷீலா, ஆனந்த ஜோதி தம்பதியினர்.

‘‘கோவையில் வடவல்லிதான் என்னுடைய ஊர். பொறியியல் பட்டதாரி. கை நிறைய சம்பளத்தில் வேலை. கொரோனா எங்க எல்லோரையும் புரட்டிப் போட்டது. அந்த சமயத்தில் வீட்டில் இருந்தபடியே வேலைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அலுவலக வேலையை வீட்டில் பார்த்து வந்தாலும், வேறு ஏதாவது சொந்தமாக தொழிலிலும் ஈடுபடலாம் என்ற யோசனை ஏற்பட்டது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப் பார்ப்பதால் ஏற்படும் அசவுகரியம் ஒரு பக்கம் இருந்தாலும், வீட்டில் வேலைப் பார்க்கும் போது, ஏதாவது ஸ்நாக்ஸ் உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். நாவிற்கு சுவையாக இருந்தாலும், அது நாளடைவில் தன்னுடைய வேலையை காண்பிக்க துவங்கும்.

அதற்கு ஈடாக மேலும் காலை சிற்றுண்டிக்கு ஏற்ப ஒரு நல்ல ஆரோக்கிய உணவினை கொடுக்க விரும்பினேன். நானும் மற்றவர்கள் போல் சிறுதானிய மாவு அல்லது சிறுதானியங்களை விற்பனை செய்யாமல், வித்தியாசமாக செய்ய விரும்பினேன். அதில் துவங்கப்பட்டது தான் எங்களின் சிறுதானிய முசிலி நிறுவனமான ‘ஹெர்போலைட் நியுட்ரிலைட்’. இது ஒரு முழுமையான காலை உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது’’ என்ற ஆனந்த ஜோதி முசிலியின் தயாரிப்பு மற்றும் பேக்கிங் முறைகள் குறித்து விவரித்தார். அவரை தொடர்ந்தார் அவரின் மனைவி அனுஷீலா.

‘‘முசிலி என்பது பல வகை தானியங்கள், நட்ஸ் வகைகள், உலர்ந்த பழங்கள் கொண்டது. இதனை சூடான பால் மற்றும் தேன் கலந்து சாப்பிடலாம். சில முசிலியில் இனிப்பு சுவை சேர்க்கப்பட்டு இருக்கும். அதனை அப்படியே பாலில் சேர்த்து சாப்பிட்டால் போதும். தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் கார்ன் பிளேக்ஸ் மக்காச்சோளம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முசிலி பெரும்பாலும் கோதுமை மற்றும் தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் உணவு.

அதில் நாங்க சிறுதானியங்களை சேர்த்து செய்ய திட்டமிட்டோம். முதலில் ஒரு வகையினை தான் அறிமுகம் செய்தோம். அதன் பிறகு தற்போது ஐந்து வகையான சிறுதானிய முசிலிகளை நாங்க விற்பனை செய்து வருகிறோம். மேலும் இவை பெரிய பாக்ெகட்களில் மட்டுமில்லாமல் ஒரு வேளை உணவாக சாப்பிடும் வகையில் பத்து ரூபாய்க்கு சிறிய பாக்கெட்களிலும் விற்பனை செய்து வருகிறோம். சிறுதானியங்களை அவல் வடிவத்தில் தருவதால், இதனை சமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, சாப்பிடவும் எளிதானது.

முதலில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்களை நேரடியாக கொள்முதல் செய்வோம். அதன் பிறகு அதனை நன்கு சுத்தம் செய்து அரிசி ஆலையில் கொடுத்து அவலாக மாற்றிக் கொள்வோம். இதன் மூலம் அதன் இயற்கை பண்புகள் மாறாமல் பாதுகாக்க முடியும். மேலும் நாங்க எந்தவித ரசாயனங்களும் இதில் கலப்பதில்லை. கார்ன் பிளேக்ஸ் என்பது அமெரிக்கர்களின் உணவு.

அதேபோல் முசிலியை ஸ்பானிஷ் நாட்டினர் இரவு நேர உணவாக சாப்பிடுவது வழக்கம். இவை அனைத்தும் அந்த ஊரின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட உணவு. ஆனால் நம்மூர் சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதுதான் சிறுதானியங்கள். அதனை நாம் வெளிநாட்டு உணவு போல் கொடுக்கும் போது, குழந்தைகளும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்’’ என்றார் அனுஷீலா.

‘‘நம் முன்னோர்கள் பயன்படுத்திய சிறுதானியங்களை நாம் முற்றிலும் மறந்துவிட்டோம். இதில் நார்சத்து அதிகம். பசியினை கட்டுப்படுத்தும். இதனால் நாம் அதிகம் சாப்பிடுவதை தவிர்த்து அளவோடு சாப்பிடுவதால், நம்முடைய உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நாங்க இந்த நிறுவனத்தை 2020ல்தான் ஆரம்பித்தோம். அதன் பிறகு நிறுவனம் வளர்ச்சியடைய ஆரம்பித்த பிறகு 2022ல் தொழிற்சாலையாக அமைத்தோம். பிரதமர் உணவு பதப்படுத்தும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த தொழிற்சாலையை அமைத்தோம்.

இந்த திட்டத்தில் சிறு தொழிலதிபர்களுக்கு 35% மானியம் கொடுக்கிறார்கள். மல்டி மில்லட் முசிலி தான் எங்களின் முக்கிய தயாரிப்புகள். குதிரைவாலி, வரகு, சாமை, கேழ்வரகு போன்றவற்றை அவலாக மாற்றி அதனுடன் ஓட்ஸ், பாதாம், பிஸ்தா, முந்திரி, அத்திப்பழம், உலர் திராட்சை, பூசணி மற்றும் வெள்ளரி விதைகள் போன்றவை நொறுக்கி சேர்த்து பேக்கிங் செய்திடுவோம். இதனை தயாரிக்கும் முன் முதலில் சிறுதானியத்தை நன்கு காய வைக்க வேண்டும். அப்போது தான் அதில் உள்ள ஈரப்பதம் முற்றிலும் நீங்கும். அடுத்து வேர்க்கடலை வறுப்பது போல, எங்களிடம் இருக்கும் வறுக்கும் இயந்திரம் மூலம் வறுத்து அதில் தேன், நாட்டுச் சர்க்கரையை கலப்போம்.

அவ்வாறு கலந்த பிறகு அதில் மீண்டும் ஈரப்பதம் உருவாகும் என்பதால், வெப்பக் காற்றை வெளியிடும் இயந்திரத்தில் அதனை உட்செலுத்தி தேன் மற்றும் நாட்டுச்சர்க்கரையால் ஏற்பட்ட ஈரப்பதத்தை போக்குவோம். அதன் பிறகு நன்கு காய வைத்து காற்றுப்புகாத நைட்ரஜன் பேக்கிங் செய்து விற்பனைக்காக மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகிறது. இதனை குழந்தைகள் முதல் 80 வயது முதியவர்கள் வரை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் இந்த தொழில் குறித்து எதுவும் தெரியாமல்தான் துவங்கினோம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஞானசம்பந்தன் அவர்கள் தான் இது குறித்து பல விஷயங்களை கற்றுக்ெகாடுத்தார். தொழில்நுட்ப துறையில் இன்றும் எங்களுக்கு பக்கபலமாக இருப்பவர் கீதாலட்சுமி. அவரின் ஆலோசனையில்தான் ஆன்லைன் வர்த்தக பிளாட்பார்மில் எங்களின் உணவுப் பொருட்கள் விற்பனையில் உள்ளது.

இதற்கு தேவையான மூலப்பொருட்கள் அனைத்தும் காஷ்மீர், பண்ருட்டி மற்றும் பல ஊர்களில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து விடுவதால், எங்களால் எல்லா காலத்திலும் எந்த ஒரு தடையும் இல்லாமல் உற்பத்தி செய்ய முடிகிறது. ஒரு நாளைக்கு சுமார் 100 கிலோ வரை நாங்க தயார் செய்து மார்க்கெட்டில் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறோம். தற்போது தமிழ்நாடு முழுதும் விற்பனை செய்கிறோம். அடுத்த இலக்கு இந்தியா முழுதும் கொண்டு செல்ல வேண்டும். தற்போது ஐந்து வகை சிறுதானியங்கள் கொண்டு தயாரித்து வருகிறோம். இதனை பத்தாக உயர்த்த வேண்டும். அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்ற ஆனந்த ஜோதி 2023ம் ஆண்டுக்கான சிறந்த ஆரம்ப தொழில் முனைவோர் என்ற விருதினை பெற்றுள்ளார்.

தொகுப்பு: சித்ரா சுரேஷ்

The post சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய...