×

அழகு தரும் அக்ரிலிக் நகங்கள் பயன்படுத்தலாமா?

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய ஃபேஷன் உலகில் பெண்கள் தங்களைஅழகாக வைத்துக் கொள்வதில் அதிகம் நாட்டம் காட்டுவதோடு அதற்காக நிறைய மெனக்கெடல்களையும் செய்து வருகிறார்கள். அந்தவகைகளில் ஒன்றுதான் நகங்களின் பராமரிப்பும். நீளமான நகங்களை வைத்துக் கொள்வதும், நகங்களில் நெயில் ஆர்ட் எனும் ஓவியங்கள் வரைந்து கொள்வதும் இன்றைய டிரண்டாகும். அதேசமயம், நீளமான நகங்கள் வைத்துக் கொள்ள முடியாத பலரும், செயற்கை நகங்களை பொருத்தி அழகு செய்து கொள்வதும் தற்போது அதிகரித்து வருகிறது.அந்தவகையில், செயற்கை நகங்களின் சமீபத்திய புது வரவே அக்ரிலிக் நகங்கள். இந்த அக்ரிலிக் நகங்களை பயன்படுத்துவது உண்மையில் பாதுகாப்பானதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அக்ரிலிக் நகங்கள் என்பது பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட நகங்களைப் போலவே இருக்கும். மோனோமர் திரவம் மற்றும் பாலிமர் தூள், இவை இரண்டையும் சேர்த்து கலந்தால் ஜெல் வடிவ கலவை கிடைக்கும். அதை விரல்களில் உள்ள இயற்கையான நகங்களின் மீது பிரஷ் கொண்டு சீராக பூச வேண்டும். அது சற்று உலர்ந்த பின்பு, அதை நமக்கு விருப்பமான வடிவத்தில் வடிவமைத்துக் கொள்ளலாம்.

இந்த ஜெல் நகத்தில் அழுத்தமாக ஒட்டிக்கொள்ளும். எனவே அக்ரிலிக் நகங்கள் எளிதில் பிரிந்து வராது. இயற்கையான நகங்களின் ஓரங்களை சீர்ப்படுத்தி, மெனிக்யூர் செய்த பின்பு அக்ரிலிக் கலவையைப் பூசி. விரும்பிய வடிவத்துக்கு கொண்டு வரலாம். அது நன்றாக உலர்ந்தவுடன், அதில் விரும்பிய டிசைன்களை வரையலாம்.

பராமரிப்பு:முதல்முறையாக அக்ரிலிக் நகங்களை அணிந்துகொள்ள விரும்புபவர்கள், மெல்லிய அடுக்காக நகங்களை வடிவமைக்கலாம். இது இலகுவாக இருப்பதோடு இயற்கையான நகங்கள் போன்ற தோற்றத்தையும் அளிக்கும். இந்த வகை நகங்களை பராமரிப்பதும் எளிதாகும்.

அக்ரிலிக் நகங்களை ஒட்டுவதற்கு முன்பு, இயற்கையான நகங்களை சீராக வெட்டி சுத்தப்படுத்த வேண்டும். அவற்றை அதிகமாக டிரிம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் இயற்கையான நகத்துக்கும் அக்ரிலிக் நகத்துக்கும் உள்ள இடைவெளி நன்றாகத் தெரியும்.அக்ரிலிக் நகங்களை நீளமாக வடிவமைப்பதைத் தவிர்க்க வேண்டும். நீளமான செயற்கை நகங்களை நீண்ட நாட்களுக்கு பராமரிக்க முடியாது. தினசரி வேலைகளில் ஈடுபடும் போது, நீளமான நகங்கள் அசவுகரியத்தை ஏற்படுத்தும். எளிதாக உடையும். எனவே.முடிந்தவரை நீளம் குறைவாக இருக்கும் வகையில் அக்ரிலிக் நகங்களை அமைத்துக் கொள்ளலாம். ஓவல் வடிவ நகங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

வழக்கமான வீட்டு வேலைகள் செய்யும்போது, கைகளில் கையுறை அணிவது அவசியமாகும். இது நகங்களை சேதமடையாமலும், நகத்துக்குள் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கும். அக்ரிலிக் நகங்களை பொருத்திக் கொள்வதாக இருந்தாலும், நீக்குவதாக இருந்தாலும், அதற்கான நிபுணர்களின் உதவியுடன் செய்து கொள்வது நல்லது.அக்ரிலிக் நகங்களில் இருக்கும் மற்றொரு நன்மை அவற்றில் ஒன்று உடைந்தாலும் உடனே சரி செய்ய முடியும். மற்ற ஜெல் நகங்களை விட இது நீண்ட காலம் நீடிக்கும் தன்மை உடையது.

அக்ரிலிக் நகங்களை இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இதன் மூலம் அவற்றின் சேதத்தை தடுக்க முடியும். அவற்றின் நேர்த்தியையும் பராமரிக்க முடியும்.

பாதிப்புகள்: அக்ரிலிக் நகங்களில் பயன்படுத்தும் ரசாயனங்கள் சென்சிடிவ்வான சருமம் உள்ளவர்களுக்கு நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே அக்ரிலிக் நகங்களை பயன்படுத்துவதற்கு முன்பு அது பொருந்துமா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் உபயோகப்படுத்தலாம்.

அக்ரிலிக் நகங்கள் சில சமயங்களில் அதன் அடியில் இருக்கும் உங்கள் இயற்கையான நகங்களை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் சேதமடைந்த நகங்களில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அக்ரிலிக் நகங்களை ஒட்டுவதற்கு இயற்கையான நகங்களின் மீது பசை தடவப்படும். அந்தப் பசை தோலை தொடாத வகையில் அப்ளை செய்ய வேண்டும்.அந்தப் பசை தோலின் மீது பட்டால் சிலருக்கு அரிப்பு ஏற்படலாம்.

அக்ரிலிக் நகங்களை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது நகங்கள் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு நகங்களை அழகுபடுத்தும் நிபுணரை நாடி ஆலோசனை பெறுவது அவசியம்.அக்ரிலிக் நகங்களை வாயில் வைத்து கடிக்கக்கூடாது. நகத்தை பயன்படுத்தி சுவிட்சுகளை இயக்குவது. கடினமான பொருட்களை திறப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அக்ரிலிக் நகங்களை வடிவமைக்க ரசாயன ஜெல்லை பயன்படுத்துவதால் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதை உபயோகிக்க வேண்டும். கர்ப்பிணிகள் அக்ரிலிக் நகங்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

தொகுப்பு: ஸ்ரீதேவி

The post அழகு தரும் அக்ரிலிக் நகங்கள் பயன்படுத்தலாமா? appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED விட்டு விடுதலையாகுங்கள்…புற்றுநோய்க்குப் பிறகான பராமரிப்பு!