×

சமையலில் மணக்கும் மருத்துவம்

நன்றி குங்குமம் டாக்டர்

இந்த பூமியில் விளையும் ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவ குணமும் சுவையும் உண்டு. இப்படி சத்தும் சுவையும் நறைந்த உணவுகளை உண்பதன்மூலம் நோய்களிலிருந்து நாம் விடுபடலாம். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

வாழைப்பூ: துவர்ப்புச்சத்து நிறைந்த வாழைப்பூவைச் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும். பேதி, சீதபேதி குணமாகும். வயிற்றுப்புண் ஆறும். வாய்நாற்றம், வியர்வை நாற்றம் போகும். உடல் எரிச்சல் நீங்கும்.

வாழைக்காய்: வாழைக்காயை சமைத்துச் சாப்பிட நாக்கில் ருசி கிடைக்கும். சூடு தணிவதுடன் உடல் பலம் பெறும். அதிகம் சாப்பிட்டால் வாய்வு அதிகரிக்கும்.

வாழைத்தண்டு: வாழைத்தண்டை சமைத்துச் சாப்பிட நீர்ச்சுருக்கு சரியாகும். குடலில் உண்டாகும் கற்களையும், சிறுநீரகக் கற்களையும் கரைத்து வெளியேற்றும். துர்நீரை வெளியேற்றும். உடல் பருமனைக் குறைக்கும்.

அத்திக்காய்: அத்திக்காயை சமைத்து உண்ண வயிற்றுப்புண், கருப்பை ரணம் ஆறும். உடல் சூடு தணியும். வாய் நாற்றம் நீங்குவதுடன் பித்தம் விலகும். பெரும்பாடு நீங்கும். மலச்சிக்கல் குணமாகும்.

சேப்பங்கிழங்கு: சேப்பங்கிழங்கு சமைத்துச் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு, மலச்சிக்கல் நீங்கும். கோழைக் கட்டு வயிற்றுப்புண் சரியாகும்.

கருணைக்கிழங்கு: கருணைக்கிழங்கு சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலம் சரியாகும். வயிற்றுப்புண், வாய்வு, பித்தக் கோளாறுகள் சரியாகும். ரத்த மூலத்துக்கு கருணைக்கிழங்கு நல்லது. பெண்களைப் பாடாய்ப்படுத்தும் மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும்.

உருளைக்கிழங்கு: வாய்வு தொல்லை இருந்தாலும், ருசி நிறைந்தது. இதைச் சாப்பிடுவதால் உடல் பலம் பெறும். இது மலத்தை இளக்குவதுடன் சோர்வை நீக்கும்.

பீட்ரூட்: சர்க்கரைச்சத்து நிறைந்தது. இதை சமைத்துச் சாப்பிட்டால் ரத்தம் ஊறும். குறிப்பாக ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன் முகம் அழகு பெறும். இருமல், சோர்வு நீங்கும்.

பீன்ஸ்: பீன்ஸை சமைத்துச் சாப்பிட்டால் மூளை பலம் பெறும். புண்களை ஆற்றும். பாஸ்பரஸ் சத்து நிறைந்தது என்பதால் பீன்ஸை அடிக்கடி சாப்பிடலாம்.

நெல்லிக்காய்: கல்ப உணவு, குளிச்சியானது. தங்கச்சத்து உள்ளது. இது பலம் தரக்கூடியது. பித்தம் போகும். ஞாபக சக்தியை தரும், நரைமுடியை கருக்கச் செய்யும் நரம்புக்கு பலம் தரும். ஊளைச்சதையை நீக்கும். சோர்வை நீக்கும்.

பச்சை மிளகாய்: பச்சை மிளகாயை சமையலில் சேர்த்துக் கொண்டால் பசி அதிகரிக்கும். உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும் என்பதால் இது செரிமானக் கோளாறுகளைப் போக்கும். மூட்டு வலி, கீல் வாதம் போக்கும்.

வெண்டைக்காய்: வெண்டைக்காய் சமைத்து உண்ண மூளை வளர்ச்சி அடையும். ஞாபக சக்தி மிகும். சீதபேதி குணமாகும்.

முள்ளங்கி: முள்ளங்கி சமைத்து உண்ண சூடு தணியும். வாய்வை நீக்கும். நீரை வெளியேற்றும். சிறுநீர் பெருகும். வீக்கம் வடியும். நீரிழிவு கட்டுக்குள் இருக்கும். சிறுநீரக கற்களை கரைக்கும். மார்பு வலி நீங்கும்.

சிவப்பு முள்ளங்கி: சிவப்பு முள்ளங்கி சமைத்து உண்ண சருமம் அழகு பெறும். கண்பார்வை ஒளிதரும். ரத்தப் பெருக்கு உண்டாகும். நரம்புகளுக்கு வலு உண்டாகும்.

தக்காளி: தக்காளி சமைத்து உண்ண உடல் சூடு தணியும். ரத்தவிருத்தி உண்டாகும். உடல் வலியும், பொலிவும் பெறும். ரத்த ஓட்டம் சீராகும். தோல்வியாதி நீங்கும்.

வெங்காயம்: வெங்காயம் சமையலில் சேர்க்க ருசி தரும். மணம் தரும். ரத்த ஓட்டம் சீராகும். மண்ணீரல் கோளாறுகள் அகலும், கண்நோய் நீங்கும். சரும நோய்கள் அகலும் அம்மை தடுப்பு மருந்தாக பயன்படும்.

வெள்ளைப் பூண்டு: வெள்ளைப் பூண்டை சமையலில் சேர்க்க உணவு மணம் தரும். கிருமிகளை வெளியேற்றும். ரத்த கொதிப்பு தீரும். சளி, இருமல் தீரும். ரத்தம் சுத்தியாகும்.

சீரகம்: தங்கச்சத்து உள்ளது. சமையலில் சேர்த்தாலும் ரசத்தில் சேர்த்தாலும் உபயோகப்படுவதோடு, குடிநீர் செய்து உபயோகித்தாலும், பித்தம் அகலும். அக உறுப்புகளின் இயக்கத்தை சரிசெய்யும், கண்பார்வை தரும். கல்ப உணவாகும். பசி தரும்.

கொத்துமல்லி: கொத்துமல்லி சமையலில் சேர்க்க உட்சூடு தணியும். பித்தம் அகலும். நாட்பட்ட சீதபேதி, மூலம் தீரும்.

மஞ்சள்: மஞ்சள்தூளை சமையலில் சேர்க்க உணவு ருசி தரும். கிருமிகள் நாசமாகும். தோல் நோய் அகலும். இதை முகத்தில் பூசி வர மாசு மருக்கள் நீங்கும்.

தொகுப்பு: ரிஷி

The post சமையலில் மணக்கும் மருத்துவம் appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,earth ,Dinakaran ,
× RELATED மனவெளிப் பயணம்