×

வளம் தரும் வால்நட் எண்ணெய்!

நன்றி குங்குமம் டாக்டர்

சரும பராமரிப்புக்காக பல்வேறு அழகு சாதன பொருட்களை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனால், அவற்றில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகளே நாளடைவில் நம் சருமத்துக்கு பாதிப்பை உண்டாக்கிவிடுகின்றன என்பதே நிதர்சனம். அதே சமயம், இயற்கை நமக்கு ஏராளமான பொருட்களை வழங்கியுள்ளது. இதில் ஒன்றுதான் வால்நட் எண்ணெய். ஆரோக்கியமான சருமத்தை அடைவதற்கான குறிப்பிடத்தக்க பொக்கிஷமாக விளங்குகிறது.

வால்நட்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் நிறைந்திருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் ஈ மற்றும் ஆக்சிஜனேற்ற மூலக்கூறுகள் சருமத்தை பிரகாசமாக்கும் தன்மை கொண்டவை. அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் நிறைந்த வால்நட் எண்ணெய் பல நூற்றாண்டுகளாகவே சரும பராமரிப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இயற்கையான மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது.

வால்நட் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும். புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள முடியும்.வயது முதிர்ச்சியின்போது ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தின் விளைவாக சருமத்தில் சுருக்கங்களும், கோடுகளும் உண்டாகின்றன. வால்நட் எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் பிரீராடிக்கில்களை நடுநிலைப்படுத்தி செல்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன. இதன்மூலம் சருமம் முதிர்ச்சி அடையும் செயல்பாடு தாமதமடையும்.

இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சென்சிட்டிவ்வான சருமத்தினருக்கு பல நன்மைகளை தருகின்றன. தோல் அழற்சி, அரிப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் அந்த இடங்களில் வால்நட் எண்ணெயை மேற்பூச்சாக பூசி வரலாம்.வால்நட் எண்ணெயின் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், சருமத் துளைகளில் ஏற்படும் நோய்த்தொற்றை தடுக்கின்றன முகப்பருக்களை நீக்குகின்றன.

இயற்கையான சரும நிறத்தை மேம்படுத்துகின்றன. சருமத்தில் ஆழமாக ஊடுருவும் திறன் கொண்ட வால்நட் எண்ணெய் புதிய செல்களின் உற்பத்தியை தூண்டும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும்.வால்நட் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்தால் சருமத்தில் இருக்கும் பூஞ்சை தொற்றுகளைத் எதிர்த்து அவை சிறப்பாகப் போராடும். இந்த எண்ணெய் பாதிக்கப்பட்ட பகுதியைத் தணித்து நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சரியான ஊட்டச்சத்தை வழங்குகிறது. மேலும் அது நோய்த்தொற்று பரவாமல் தடுக்கிறது.

வால்நட் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் அவை மாசுபாடு மற்றும் சூரியக் கதிர்களின் தாக்கம் போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

தொகுப்பு: ரிஷி

The post வளம் தரும் வால்நட் எண்ணெய்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED சமையலில் மணக்கும் மருத்துவம்