×

உரிய ஆவணங்கள் இல்லாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 13 ஆட்டோக்கள் பறிமுதல்

புவனகிரி, பிப். 24: சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், தகுதிச் சான்று பெறாமலும் இயக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து துறை அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் உத்தரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அதிரடி சோதனை நடத்தினார். அப்போது பல்வேறு இடங்களில் உரிய தகுதிச் சான்று பெறாமலும், ஓட்டுனர் உரிமம் பெறாமலும் அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் கண்டறியப்பட்டது. இதையடுத்து 13 ஆட்டோக்களை அதிரடியாக கைப்பற்றிய மோட்டார் வாகன ஆய்வாளர், மேல் நடவடிக்கைக்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்தார்.

இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா கூறுகையில், ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் தகுதி சான்று இல்லாமல் வாகனம் சிறை பிடிக்கப்பட்டால் அபராத தொகை, தகுதி சான்று பெறுவதை காட்டிலும் அதிக அளவில் உள்ளதால் அனைவரும் அபராதம் செலுத்துவதற்கு பதிலாக தங்களது வாகனங்களை சரியான முறையில் பராமரித்து வைத்துக்கொள்ள வேண்டும், என்றார். மேலும் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களுக்கு போக்குவரத்து ஆணையர் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வர இருப்பதால், ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

The post உரிய ஆவணங்கள் இல்லாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 13 ஆட்டோக்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bhuvangiri ,Chidambaram ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...