×

மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்

குருவாயூரப்பனின் மகிமையை உலக மக்களுக்குப் பறை சாற்றிய பெருமையில் பெருமளவு நாராயணீயத்தை சாரும். அந்த பக்திக் காவியத்தை இயற்றிய அருட்கவி நாராயணபட்டத்ரியின் பெருமையை பாரதமெங்கும் பரப்பிய பெருமை  அனந்தராம தீட்சிதரையே சாரும். இவ்விருவருக்கும் பெருமையளிக்கும் வகையில் குருவாயூர் ஆலயத்தின் முன்மண்டபத்தில் ஒரு பெரிய வண்ண ஓவியம் வைக்கப்பட்டிருக்கிறது. நடுவில் குருவாயூரப்பன் நிற்கிறார். அவர் திருவடிகளின் வலப்புறம் நாராயணபட்டத்ரியும், அனந்தராம தீட்சிதரையும் காணலாம். மோப்பத்தூர் நாராயணபட்டத்ரி நானூறு வருடங்களுக்கு முன், கேரளத்தில் தோன்றிய மகானாவார். கி.பி.1560 – லிருந்து 1666 வரை, 106 – வயது வரை வாழ்ந்தவர்.

இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட்டத்ரி. அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோடியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
 குருவாயூரப்பனின் அருமை பெருமைகளையெல்லாம் மலையாள மொழியில் ஒரு காவியமாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார் பட்டத்ரி.

அந்தக் காலத்தில் மிகவும் புகழடைந் திருந்தவரும், மகாபண்டிதரும், மலையாள மொழியின் தந்தையுமான ‘துஞ்சத்து எழுத்தச்சன்’ என்பவர் ஒரு வழிகாட்டினார். ‘மச்சம் தொட்டு ஆரம்பிக்கச்சொல்’ என்று பரிபாஷையில் ஒரு செய்தி அனுப்பினார். அவருக்கு அதன் பொருள் புரிந்துவிட்டது. மந் நாராயணனின் மச்சாவதாரத்தில் தொடங்கி, பகவானின் அவதார லீலை களைப் பாடவேண்டும் என்று உத்தரவு வந்துள்ளதை உணர்ந்து, குருவாயூருக்குச் சென்றார்.

குட்டிக் கிருஷ்ணனின் திருச்சந்நதியில் அமர்ந்தார் கவிப்பிரவாகம் பெருக் கெடுத்தது. பகவான் வியாசர் இயற்றிய மத் பாகவதத்தின் 18000 – ஸ்லோகங்களும், 1034 – ஸ்லோகங்களாக உருமாறி நூறு தசகங்களாக மலர்ந்தன. இந்த பக்தி நூலை இவர் இயற்றினார் என்பதைவிட, குருவாயூரப்பனே இவர் மூலம் தன் பெருமைகளைப் பாடிக் கொண்டார் என்பதே பொருந்தும்.

பட்டத்ரி, பக்திப் பெருக்குடன் ஒவ்வோர் அடியையும் இனிமையாகப் பாடப்பாட, அதை  குருவாயூரப்பன் அவர் எதிரில் அமர்ந்து கவனமாகக் கேட்டு தலையை அசைத்து ஆமோதித்ததுதான் இந்தக் காவியத்தின் பெருமை. லீலைகள் பல புரிந்த குட்டி கிருஷ்ணனின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூறிவிட்டு, பட்டத்ரி, ‘குருவாயூரப்பா! இப்படித்தானா? கிருஷ்ணா இப்படித்தானா?’ என்று சந்தேகத்தோடு கேட்டாராம். ‘ஆமாம், சரிதான்’ என்று குருவாயூரப்பன் ஆமோதிப்பாராம். அதன் பிறகுதான் பட்டத்ரி அடுத்தவரிக்குச் செல்வாராம்.

நரசிம்ம அவதாரத்தைப் பற்றிச் சொல்ல வரும்போது, அவரை எப்படி வர்ணிப்பது என்று பட்டத்ரி யோசித்துக் கொண்டிருந்தாராம். அப்போது வாதிமாடத்திலுள்ள தூண் ஒன்றிலிருந்து  நரசிம்ம மூர்த்தி தோன்றி, அங்குமிங்கும் நடந்து காட்டினாராம். கண்ணெதிரே தாம் கண்ட அற்புதக் காட்சியை பட்டத்ரி அப்படியே எழுதிவிட்டாராம்.

இப்படி பூர்ணாவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ கிருஷ்ணாவதார லீலைகளைஉள்ளம் உரு, மெய்சிலிர்க்க வர்ணித்துள்ளார் ஸ்ரீ நாராயண பட்டத்ரி. பகவானின் ஒத்துழைப்புடனும் பூரண ஆசியுடனும் இந்த ‘நாராயணீயம்’ எனும் இந்த அமிர்தத்தை, அவர் ஆத்ம நிவேதனமாகப் படைத்திருப்பதால், படித்தாலும் சொல்லக் கேட்டாலும் நம் உள்ளத்திலும் ஸ்ரீ கிருஷ்ண பக்தியைத் தூண்டக் கூடியதாக அமைந்திருக்கிறது.

பட்டத்ரி, கார்த்திகை மாதம் இருபத்தெட்டாம் தேதி ‘நாராயணீயத்தைப் பூர்த்தி செய்து, ஸ்ரீ குருவாயூரப்பனின் திருவடிகளில் சமர்ப்பித்தாராம். அந்த நாள் ‘நாராயணீய தினமாகக் குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தி, மகாபண்டிதர்களைக் கொண்டு நாராயணீயத்தைப் ‘பாராயணம்’ செய்ய வைப்பது குருவாயூரப்பன் ஆலயத்தில் செலுத்தும் பிரார்த்தனைகளில் ஒன்றாகும். மோப்பத்தூர், ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஓர் அவதார புருஷராகவே கருதப்படுகிறார். அவர் லட்சுமணனாகவும், பலராமனாகவும் அவதரித்த ஆதிசேஷன் என்றே
போற்றப் படுகிறார்.

அதனால்தான், தன் விருப்பங்களையெல்லாம் ஸ்ரீ குருவாயூரப்பனிடம் நேரில் கண்டு கேட்டுப் பெற்றார் என்பது வரலாறு! நாராயணீயத்தை உருவாக்கிய பட்டத்ரி, பகவானிடம் தனக்கு க்ஷேத்ராடனம், தீர்த்தாடனம் ஆகிய புனிதமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதன்படியே அவருக்குப் புனிதப் பயணமும், புண்ணிய தரிசனமும் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரா, காவேரி, தாமிரபரணி, கிருதமாலா ஆகிய பல புண்ணிய நதிகளிலும் நீராடும் சந்தர்ப்பத்தைப் பெற்று மகிழ்ந்தார். ‘‘உன்னை நாடி வரும் பக்தர்களுடன் சேர்ந்து இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்க வேண்டும்!’’ என்றும் அவர் குருவாயூரப்பனிடம் கேட்டுக் கொண்டார். பகவான் அதற்கு வேண்டிய அருள் செய்தமையினால், பக்த கோடிகளின் சத்சங்கம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இப்படிப் புனிதப் பயணம் மேற்கொண்டாலும், பட்டத்ரி சந்நியாசி ஆகவில்லை. வானப்பிரஸ்த நிலையில் இருந்தபடியே, குடும்பத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்ந்து, பகவத் சிந்தனையிலேயே காலத்தைக் கழித்தார். அவர் அவ்வாறு மேற்கொண்ட புனித யாத்திரையில் முக்கியமாக ஆதிசங்கர பகவத்பாதர் பிரதிஷ்டை செய்த ‘தேவி விஷ்ணு மாயா’ எழுந்தருளியுள்ள முக்கோலம் எனும் முக்திஸ்தலத்துக்குச் சென்று ஒரு மண்டலகாலம் அங்கேயே தங்கி வழிபட்டதுதான் அவருக்கு பெருமளவில் மனசாந்தி அளித்தது.

முக்கோலம் திருத்தலத்திலேயே ஒருமண்டலகாலம் தங்கி விஷ்ணுமாயா தேவியின் புகழைப்பாடி அன்னையின் அருளைப் பெற்றார். இப்படி இந்த நாற்பது நாட்களில் அவர் உருவாக்கிய மற்றொரு புனிதநூல்தான், ‘‘ஸ்ரீ பாத சப்ததி’’ என்பது. விஷ்ணுமாயாவான ஸ்ரீ துர்கா தேவியின் ஸ்ரீ  பாதவர்ணனைதான் இந்த நூல், தனது புனிதப் பயணத்தின் முடிவில், வானப்பிஸ்தாசிரமத்திலேயே யோக வாழ்க்கையை நடத்தி முடித்துக் கொண்டு தனது மனைவியின் இல்லத்துக்கு வந்து சேர்ந்தார் பட்டத்ரி.

அவருடைய மைத்துனராக இருந்தது மட்டுமின்றி, அவருக்கு வழிகாட்டிய குருநாதராகவும் விளங்கிய ‘அச்சுத பிக்ஷாரொடி’ அப்போது வாழ்க்கையின் கடைசி நிலையை அடைந்திருந்தார். மரணப் படுக்கையில் இருந்த அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார் பட்டத்ரி. அந்த வேளையில் மரணத்தின் வாயிலில் ஈஸ்வரனை வேண்டி ஒரு ஸ்லோகம் பாடினார் அச்சுத பிக்ஷாரொடி

‘‘காயே ஸ்ரீததி கண்ட ரோதினிகபே
கண்டேச வாணீ பதே
ஜிம்மாயாம் த்ருசி ஜீவிதே ஜிக்மிஷெள
ச்லாஸேச நச்சாம்யதி
ஆகத்ய ஸ்வயமே வன – கருணையா
கார்த்யாயினீ காமுக:
கர்ணே வர்ணயதாம் பவார்ணவ பயாத்
உத்தாரகம் – தாரகம்’’

இந்த ஸ்லோகத்தைப் பாடி வந்த போது, அதன் கடைசியில் ஒரே ஒருவார்த்தை மிகுதி இருக்கும் போது பிக்ஷாரொடியின் மூச்சு நின்றுவிட்டது. அந்த நிலையில் ‘‘தாரகம்’’ என்ற ஒரு வார்த்தையைச் சேர்த்து பட்டத்ரி ஸ்லோகத்தைத் தாரக மந்திரமாக முற்றுப் பெறச் செய்தார்! அப்படிச் சேர்த்திராவிட்டால் அந்தச் ஸ்லோகம் அர்த்த மற்றதாகப் போயிருக்கும். ‘‘தாரகம்’’ என்ற அந்த ஒரு வார்த்தையின் சேர்க்கையினால்தான் பிரார்த்தனை முற்றுப் பெற்றுச் சிவபக்தரான பிக்ஷாரொடியையும் கதை சேர்த்தது. அந்தச் ஸ்லோகத்தின் பொருள் இதுதான் – ‘‘எனது உடம்பெல்லாம் தளர்ந்து பல வீன நிலையை அடைந்துவிட்டது. நெஞ்சில்கபம் கட்டிக் கொண்டு தொண்டையை அடைக்கிறது. கழுத்துக்கு மேலே குரல் பிரிந்து வரவில்லை கண்ணெல்லாம் பார்க்க முடியாமல் பசலை அடைந்துவிட்டது.

என்னால் எதையும் கூர்ந்து கவனிக்க இயலவில்லை. மூச்சு தடுமாறுகிறது. இந்த நிலையில் தானாகவே அன்னை கார்த்தியாயினி மாறனாகிய சிவபெருமானான நீங்கள் என் காதில் வந்து ஓதட்டும்’’ என்று பிக்ஷாரொடி சொன்ன நிலையில் உயிர் பிரிந்துவிட்டது. இதைத் ‘தாரகம்’ என்ற ஒரு வார்த்தை சேர்த்து பட்டத்ரி முடித்ததனால் இதுவே மரண நிலையில் ஓதும் ‘‘தாரக மந்திரத்தைக்’’ குறிக்கும் அற்புத ஸ்லோகம் ஆகிவிட்டது.

உன்னதமான ஒரு மந்திரமாகிவிட்டது. இன்றும் கேரளத்தில், மரண நிலையில் உள்ளவர்களுக்கு இந்த அற்புத ஸ்லோகத்தை அருகில் இருப்பவர்கள் சொல்லும் மரபு உள்ளது. இதைச் சொல்லக் கேட்ட அவர்கள் கைலாய பதவி அடைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மகாஞானிகளுக்குச் சிவபெருமானே நேரில் வந்து தாரக மந்திரத்தைச் செவியில் ஓதி அழைத்துப் போவார் என்றும் உறுதியாக நம்புகிறார்கள். ஸ்ரீ நாராயணீயத்தை அருளிய மகான் பட்டத்ரியின் இந்த சேவையை அன்பருலகம் இன்றும் பாராட்டிக் கொண்டிருக்கிறது.

டி.எம்.ரத்தினவேல்

The post மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம் appeared first on Dinakaran.

Tags : Mahan Narayanabhattatri ,Narayaniya ,Guruvayurappa ,Anantharam Dikshitra ,Narayanapattri ,India ,Guruvayur ,
× RELATED வராக மூர்த்தி பூமிதேவி கோவிலில் நாராயணீய பாராயணம்