×

மரத்தில் பைக் மோதி விபத்து பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி மேலும் ஒரு மாணவர் படுகாயம்

மேல்மலையனூர். பிப். 23: மரத்தின் மீது பைக் மோதியதில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவர் படுகாயமடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகன் சக்திவேல்(16). உலகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் வசந்தகுமார்(17). இவர்கள் இருவரும் சேத்துப்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு வசந்தகுமாரின் மாமாவுக்கு சொந்தமான பைக்கை வாங்கிக்கொண்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டை எய்யில் கிராமத்தில் நடைபெறும் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்தனர். வசந்தகுமார் பைக்கை ஓட்டி வந்தார். இவர்களுடன் சக மாணவர் 12ம் வகுப்பு படிக்கும் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்த முருகன் மகன் ஐயப்பன்(17) என்பவரும் உடன் சென்றார்.

எய்யில் கூட்ரோடு அருகே இரவு 11 மணி அளவில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக், அருகில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதனால் பைக் நொறுங்கியது. இதில் பலத்த காயமடைந்த வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உயிருக்கு போராடிய சக்திவேலை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஐயப்பன் பலத்த காயங்களுடன் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண விழாவுக்கு ஒரே பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மரத்தில் பைக் மோதி விபத்து பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி மேலும் ஒரு மாணவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Melmalayanur ,Sakthivel ,Nedunchezhiyan ,Arashampatu ,Tiruvannamalai district ,Ravi Makan ,Ulagapattu ,
× RELATED மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில்...