×

தன் பக்தைக்காக சாய் பாபா செய்த அற்புதம்

இந்த உலகத்தில் மனிதனாக பிறந்து, கடவுளாக அவதரிக்கப் பட்டவர் தான் ஷீரடி சாய்பாபா.பாபாவைப் பற்றியும், அவர் தனது பக்தர்களுக்கு தரிசனம் தந்ததை பற்றியும், இப்பொழுது இந்த கதையில் காண இருக்கிறோம். ஒரு கிராமத்தில் தார்க்காட் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மனைவியும், மகனும் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பாபாவின் மீது பக்தி அதிகம். ஆனால் தார்க்காட்டிற்கு பாபாவின் மீது நம்பிக்கை இல்லை.

தார்க்காட்டின் மனைவிக்கும், மகனுக்கும் ஷீரடி சென்று பாபாவை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் ஷீரடிக்கு சென்று விட்டால் வீட்டில் உள்ள பாபாவின் திருவுருவச் சிலைக்கு பூஜை செய்து படையல் வைப்பது யார்? என்று அவர்களுக்குள் ஒரு தயக்கம். தனது மனைவி, மகனின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட தார்க்காட், தானே பாபாவிற்கு தினமும் பூஜை செய்து படையலை படைக்க ஒத்துக்கொண்டார். பூஜையின் பொறுப்பை தார்க்காட் ஏற்றுக் கொண்டதால் இருவரும் பாபாவை தரிசனம் செய்ய சீரடிக்கு புறப்பட்டு விட்டனர்.

தார்க்காட், தினமும் காலையில் எழுந்தவுடன் பாபாவிற்கு தேவையான பிரசாதத்தை செய்யும்படி அவரது வேலையாட்களிடம் கூறுவார். அந்த பிரசாதம் காலையில் பாபாவிற்கு நெய்வேத்தியம்மாக வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். அலுவலகம் சென்று வந்தபின் அந்த பிரசாதத்தை தார்க்காட் மதிய உணவாக சாப்பிடுவார். இது இரண்டு நாட்கள் சரியாக நடந்தது. ஆனால் மூன்றாம் நாள் பாபாவின் நெய்வேத்திய பிரசாதத்தை தயார் செய்ய சொல்லாமலே அலுவலகம் சென்று விட்டார் தார்க்காட். மதியம் வீடு திரும்பும் வரை அவருக்கு அது நினைவுக்கு வரவில்லை. மதியம் வீடு திரும்பியதும், பாபாவின் சிலையின் முன்னால் நெய்வேத்திய பிரசாதம் இல்லை என்ற போது தான் அவருக்கு நினைவு வந்தது.

தன் மனைவி, மகனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே என்று எண்ணி அவர் இந்த சம்பவத்தை சீரடியில் உள்ள மனைவிக்கும், மகனுக்கும் தெரியப்படுத்த கடிதம் எழுதினார். அந்தக் கால கட்டத்தில் ஒருவரை உடனடியாக தொடர்பு கொள்ள தொலைபேசி வசதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தார்க்காட் இங்கு கடிதம் எழுத தொடங்கிய அந்த சமயத்தில் சீரடியில் தார்காட்டின் மனைவியும், மகனும் பாபாவின் முன் அமர்ந்து இருந்தனர்.

தார்க்காட், அறியாமல் செய்த தவறினை உணர்ந்த பாபா புண்முறுவலுடன் தார்க்காட்டின் மனைவி மகனை பார்த்து, “இன்று நான் உங்கள் வீட்டிற்கு சென்றேன் ஆனால் எனக்கு அங்கு உணவு கிடைக்கவில்லை”. என்றாராம். இது தார்க்காட்டின் மனைவிக்கு புரியவில்லை. ஆனால் மகன் ஒரு யூகத்தில் ஒருவேலை, அப்பா இன்று நமது வீட்டில் பாபாவிற்கு படையல் இட மறந்து விட்டாரோ? என்று எண்ணி அவன் அம்மாவிடம் கூறினான்.

இரண்டு நாட்கள் கழித்து தான் கடிதம் ஷீரடியில் உள்ள மனைவி, மகனுக்கு கிடைத்தது. பின்பு தான் அவர்களுக்கு பாபாவின் கூற்று புரிந்தது. தன் மனைவி, மகனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே என்று எண்ணி தான் செய்த தவறை உடனடியாக தெரியப்படுத்த முயன்ற தார்க்காட்டின் உணர்வும் உண்மையான பக்தி தான்.

பாபாவிடம் பக்தி இல்லை என்றாலும், தார்காட் தன் மனைவி, மகனிடம் கொண்டுள்ள பக்தியின் காரணமாக பாபாவின் ஆசியைப் பெற்றார். தார்க்காட் படைத்த நெய்வேத்தியத்தை பாபா ஏற்றுக் கொண்டார் அல்லவா!. பாசமோ, பக்தியோ கடவுளிடம் இருந்தாலும் சரி அல்லது மனைவி, மகன், மகள், நண்பர்கள், உற்றார், உறவினர்களிடம் இருந்தாலும் சரி அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். தார்க்காட்டின் மனைவியும், மகனும் பாபாவிடம் காட்டிய பக்தியும் சரி. தார்க்காட் தனது மனைவி, மகனிடம் காட்டிய நேர்மையும் சரி. இரண்டுமே ஒன்றுதான்.

The post தன் பக்தைக்காக சாய் பாபா செய்த அற்புதம் appeared first on Dinakaran.

Tags : Chai Baba ,Sheeradi Saibaba ,Baba ,Tharkat ,Sai Baba ,
× RELATED பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் 2வது...