×

10 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் தமிழக – கேரள இணைப்பு சாலை: ரூ.2,433 கோடியில் இருந்த திட்ட மதிப்பு ரூ.3,575 கோடியாக உயர்ந்ததுதான் மிச்சம்

சிறப்பு செய்தி

குமரி மாவட்டத்தையும், கேரளாவையும் இணைக்கும் வகையில் கன்னியாகுமரி-காரோடு (கேரளா) இடையே 53.7 கி.மீ தூரத்துக்கு ரூ.2433.25 கோடி செலவில் 4 வழி சாலையை ஒன்றிய அரசு துறையின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2013ம் ஆண்டு தொடங்கியது. இதில் காரோடு முதல் வில்லுக்குறி வரை 27 கி.மீ தூரம், வில்லுக்குறி முதல் நாகர்கோவில் அப்டா மார்க்கெட் வரை 14 கி.மீ, அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரை 16 கிமீ, அப்டா மார்க்கெட் முதல் கன்னியாகுமரி முருகன் குன்றம் வரை 12 கிமீ தூரம் என ஆங்கிலத்தில் ‘ஒய்’ எழுத்து வடிவில் ஒரு நான்கு வழி சாலைக்கு திட்டமிடப்பட்டது.

இதில் அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரை மட்டும் நான்கு வழி சாலை பணிகள் நிறைவு பெற்று அதன் வழியாக வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு வரை திட்ட பணிகள் இழுவையாக இழுத்து நடைபெற்று வந்தது. பின்னர் கொரோனா பரவல் காரணமாக திட்ட பணிகள் தடைபட்டது. கன்னியாகுமரிக்கும், சுசீந்திரத்திற்கும் இடையே சிறிது சிறிதாக 4 வழி சாலை பணிகள் நடைபெற்றுள்ளது. மொத்தம் 53.7 கி.மீ தூரம் வருகின்ற பாதையில் இதுவரை 30.274 கிமீ தூரம் கட்டுமான பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள 24.05 கி.மீ தூரம் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. கட்டுமான பணிகளுக்கு தேவையான மண் கிடைக்கவில்லை என்று கூறி திட்ட பணிகள் தாமதத்திற்கு அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர்.

தற்போது நெல்லை மாவட்டத்தில் இருந்து மண் கொண்டுவரப்படுகிறது. ஆனால் மண் கிடைக்கவில்லை என்று கூறி திட்ட பணிகளை மேற்கொண்ட நிறுவனம், பணிகளை பாதியில் போட்டுவிட்டு மூட்டைகட்டி உள்ளது. இதனால் திட்ட மதிப்பு அதிகமாகி உள்ளது. தற்போது கட்டுமான பணிகளுக்கு கூடுதல் ரூ.1141.78 கோடி செலவில் மீண்டும் டெண்டர் பிறப்பிக்கப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றுவிட்டால் கேரளா எல்லையான காரோட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு 30 நிமிடங்களில் வந்து சேர முடியும். கன்னியாகுமரியில் இருந்து கேரளா எல்லை சென்றடைய 45 நிமிடங்கள் போதும். ஆனால் பணிகள் நிறைவு பெற 2025ம் ஆண்டு ஆகஸ்ட் வரை ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் தொடர்ந்து காங்கிரஸ் அடுத்தடுத்து வெற்றிபெற்றது. எனவே ஒன்றிய அரசு 4 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும். பாஜ சார்பில் மக்கள் பிரதிநிதி தேர்வு செய்யப்படாவிட்டால் தொகுதிக்கு திட்டங்கள் ஏதும் வராது என்ற செய்தியை சொல்லும் வகையிலேயே திட்டங்களை பல்வேறு காரணங்களை கூறி கிடப்பில் போட்டு வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் நான்கு வழி சாலை திட்டம் 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு எங்கும் எட்டாமல் முடங்கி நிற்கிறது. இதனால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் உள்ள சாலைகளில் வாகன நெரிசல், விபத்துகள் அதிகரிப்பு தொடருகிறது.

* நிலம், வீடு வழங்கியவர்களுக்கு இழப்பீடு இதுவரை வழங்கவில்லை

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை மற்றும் காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரை தேசிய நெடுஞ்சாலைகளை 4 வழி சாலையாக்க 2010ம் ஆண்டு நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கவில்லை. மாவட்ட கலெக்டர் மற்றும் சமரச தீர்ப்பாயம் 2019ம் ஆண்டு உத்தரவு வழங்கி 5 ஆண்டுகளாகியும் நாகர்கோவிலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் உரிய இழப்பீடு தொகையை நிலம், வீடுகள் இழந்த ஏழை, எளியவர்களுக்கு வழங்காமல் மாவட்ட கலெக்டர் மற்றும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) ஆகியோர்களை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் 12 ரிட் மனுக்கள் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் விசாரணைக்கு வராமல் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது’ என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதே நேரத்தில் இழப்பீடு வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தையும், ஒன்றிய அரசின் அதிகாரிகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post 10 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் தமிழக – கேரள இணைப்பு சாலை: ரூ.2,433 கோடியில் இருந்த திட்ட மதிப்பு ரூ.3,575 கோடியாக உயர்ந்ததுதான் மிச்சம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nuga-Kerala Link Road ,Kanyakumari-Karod ,Kerala ,Kumari district ,National Highways Commission ,Union Government Department ,Dinakaran ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...