பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 24ம்தேதி வரை 11 நாள்கள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 4.30 மணி முதல் 5 மணிக்குள் கொடியேற்றமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் பாலாபிசேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதிஉலா வருதலும் நடக்கிறது.

முதல் நாள் திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள், இரண்டாம் நாள் திருவிழா சைவ வேளாளர் சமுதாயம், மூன்றாம் நாள் திருவிழா தேவர் சமுதாயம், நான்காம் நாள் திருவிழா யாதவர் சமுதாயம், ஐந்தாம் நாள் திருவிழா பட்டங்கட்டியார் சமுதாயம், ஆறாம் நாள் திருவிழா அரிசன சமுதாயம், ஏழாம் நாள் திருவிழா விஸ்வகர்மா சமுதாயம், எட்டாம் நாள் திருவிழா செங்குந்த முதலியார் சமுதாயம், ஒன்பதாம் நாள் திருவிழா வணிக வைசிய செட்டியார் சமுதாயம், பத்தாம் நாள் திருவிழா நாடார் சமுதாயம், பதினோராம் நாள் திருவிழா பிராமணர் சமுதாயம் சார்பில் நடைபெறுகிறது. 10ம் திருநாளான பிப்.23ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை கீழப்பாவூர் சிவன்கோயில், பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, ஆவுடையானூர், கல்லூரணி, செட்டியூர், பனையடிப்பட்டி, திப்பணம்பட்டி, அரியப்பபுரம், வெய்க்காலிப்பட்டி, ஆரியங்காவூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து பால் குடங்களுடன் ஊர்வலமாக வருகின்றனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், பூஜை, அலங்காரம் நடைபெறுகிறது.

நிறைவு நாளான பிப்.24ம்தேதி கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் தெப்பக்குளம் அருகில் வைத்து சுவாமி, அம்பாள் தீர்த்தவாரியும், பூஞ்சப்பர காட்சி மற்றும் புஷ்பாஞ்சலி நடக்கிறது. விழா நாட்களில் தினந்தோறும் காலை 11 மணிக்கு தினசரி உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு சுவாதி திருவீதி உலா நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

The post பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: