36 படிகளை கடந்து செல்ல லிப்ட் வசதியுடன் அமைக்கப்பட்டது சோளிங்கர் ரோப்கார் அமைக்கும் பணி முழுமையாக நிறைவு

*விரைவில் இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல்

வேலூர் : ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ரோப்கார் பணிகள் முழுமையாக நிறைவடைந்து ஓரிரு வாரங்களில் இயக்கப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.108 வைணவத்தலங்களில் கடிகை, கடிகாசலம், சோழசிம்மபுரம் என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் பெருமையுடைய சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் செங்குத்தான மலை உச்சியில் 1305 படிகளுடன் அமைந்துள்ளது. இந்த மலைக்கோயிலுக்கு வயதான பக்தர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் ஆகியோர் செல்வதற்கு சிரமம் இருந்து வந்தது.

அதேபோல் இந்த மலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து முடித்த பின்னர், இக்கோயில் மலையடிவாரத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் சிறிய மலையில் அமைந்துள்ள யோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்து முடிக்க வேண்டும் என்பது நியதி. இந்த மலைக்கு செல்லவும் 750 படிகளை கடக்க வேண்டும்.இதுபோன்ற சிரமங்களால் சோளிங்கர் மலைக்கோயிலுக்கு ரோப்கார் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வந்தது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சட்ட
சபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பு அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையில் கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் ₹9.26 கோடி மதிப்பீட்டில் 8 ரோப்கார்களுடன் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் 4 ரோப்கார் ஒரு பாதையிலும், 4 ரோப்கார்கள் மறுபாதையிலும் இயக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 32 பேர் பயணிக்க முடியும் என்ற திட்டத்துடன் இதற்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டது.

அதன்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இத்திட்டத்தில் மேலும் காலதாமதத்தை ஏற்படுத்த, பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது. இதையடுத்து பணிகள் 2016ம் ஆண்டு முதல் மீண்டும் வேகமெடுத்து நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ₹11 கோடி மதிப்பீட்டில் 800 பக்தர்கள் வரை காத்திருக்கும் வகையில் மிகப்பெரிய காத்திருப்பு அறை, உணவகம், கழிவறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் பணிகளும் தொடங்கி நடந்து அதுவும் தற்போது முடிந்துள்ளது.

அதேபோல் ரோப்கார் மலையின் மீது 27 படிகளுக்கு முன்பு வரை மட்டுமே செல்லும் நிலையில் மீதமுள்ள படிகளை மாற்றுத்திறனாளிகள், வயதான பக்தர்கள் கடக்கும் வகையில் ₹1.50 கோடியில் லிப்ட் அமைக்கும் பணியும் நடந்து முடிந்து, அதன் சோதனை ஓட்டமும் நடந்து முடிந்துள்ளது. ரோப்கார், பக்தர்கள் காத்திருப்பு அறை, லிப்ட் பணிகள் என அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் ஒப்பந்ததாரர்கள் அதற்கான சாவிகளை உதவி ஆணையரிடம் நாளை மறுநாள் ஒப்படைப்பதாக தெரிகிறது.

அதை தொடர்ந்து ரோப்கார் இயக்கத்தை அடுத்த 10 நாட்களில் தொடங்குவதற்கான பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, ‘பணிகள் முடிந்து, ஒப்பந்ததாரர்கள் புதன் அல்லது வியாழக்கிழமை வெளியேறுகின்றனர். தொடர்ந்து ஓரிரு வாரங்களில் ரோப்கார் இயக்கத்தை துவக்குவதற்காக துறைசார்ந்த அமைச்சரிடம் தெரிவித்து அதன்படி, அதற்கான விழா முறைப்படி நடக்கும்’ என்றனர்.

விரைவில் கும்பாபிஷேகம்

சோளிங்கர் பெரிய மலை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ராஜகோபுரம், சிறிய மலை யோக ஆஞ்சநேயர் கோயில் ராஜகோபுரம் மற்றும் கோயில் திருப்பணிகள் ஏறத்தாழ ₹1.50 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்து பெரிய மலை கோயில் கும்பாபிஷேகமும், சிறிய மலை கோயில் கும்பாபிஷேகமும் அடுத்தடுத்து நடத்தப்படுகிறது. இதில் சிறிய மலை யோக ஆஞ்சநேயர் கோயில் 65 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 36 படிகளை கடந்து செல்ல லிப்ட் வசதியுடன் அமைக்கப்பட்டது சோளிங்கர் ரோப்கார் அமைக்கும் பணி முழுமையாக நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: