சிவகங்கை, பிப். 13: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் அமைக்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் மழை நீரை சேமிப்பதற்கு ஏதுவாக, விவசாயிகளின் பட்டா நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது. புஞ்சை நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைப்பதால் மழைநீர் சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது.
இதனால் அருகில் உள்ள கிணறுகளில் நீருற்று அதிகரித்து, கிணற்றினை வைத்து சாகுபடி செய்யும் நிலப்பரப்பு அதிகமாகிறது. விவசாயம் செய்யாத தரிசு நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதால், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாறும் வாய்ப்பு ஏற்படுகிறது. பாசனவசதி இல்லாத இடங்களிலும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களிலும் பண்ணைக்குட்டையில் சேகரிக்கப்படும் மழைநீரை நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம்,
சாகுபடி செய்யப்படும் பயிருக்கு நீர் பாய்ச்சுவதால் பயிர் கருகுவது தவிர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்படுகிறது. பண்ணைக்குட்டைகளில் கட்லா, ரோகு, கெண்டை போன்ற உயர்வகை மீன்கள் வளர்க்கப்படுவதால் உபரி வருமானம் கிடைக்கிறது. எனவே பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் முன்வர வேண்டும். இது குறித்து கூடுதல் விபரம் பெற வேளாண் உதவி இயக்குநர்கள் அலுவலகங்களை அணுகலாம். இவ்வாறு வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மழைநீரை சேமிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க வேண்டும்: விவசாயிகளுக்கு வேளாண்துறை வலியுறுத்தல் appeared first on Dinakaran.