தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம்

தஞ்சாவூர், பிப். 11: தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் நடைபெற்றது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலமாக ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதில் 19 வயது வரை உள்ள குழந்தைகள், சிறார்கள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள மகளிருக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி, வண்டிக்காரத்தெரு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி நடைபெற்றது. இம்முகாமிற்கு தலைமை ஆசிரியர் விஜயகுமாரி தலைமை வகித்தார். மகர்நோன்புச்சாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லெட்சுமணகுமார் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மாநகர்நல அலுவலர் சுபாஷ் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:- உருண்டைபுழு, கொக்கிபுழு, நாடாப்புழு உள்ளிட்ட குடற்புழு தொற்றால் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து குறைபாடு, சோர்வு, பசியின்மை, ரத்தசோகை, வாந்தி, வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு இரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி, அறிவுத்திறன், உடல் வளர்ச்சியை அதிகரிக்க செய்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. மேலும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுதல், காய்கறிகள், பழங்களை கழுவிய பின்பு சாப்பிடுதல், சுத்தமான தண்ணீரை குடித்தல், காலணிகளை அணிதல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துகொள்ளுதல், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து சுகாதார கழிவறைகளை பயன்படுத்துதல், மலம் கழித்த பின்பு கைகளை கழுவுதல் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொண்டால் நலமாக வாழமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு முறையாக சோப்பு போட்டு கைகழுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவிகள் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொள்வோம், ஊட்டசத்து குறைவில்லாமல் வாழ்வோம் என்று உறுதிமொழி ஏற்று கொண்டனர். மருத்துவ குழுவினரால் பள்ளி மாணவர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டது. தேசிய குடற்புழு நீக்க நாளன்று அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகளின் பெயர் பட்டியலுடன் வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு விடுபட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் வருகிற 16ம்தேதி அன்று அல்பெண்டசோல் மாத்திரை வயதிற்கேற்றார்போல் வழங்கப்பட உள்ளது. பள்ளி செல்லா குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரவழைத்து அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. முன்னதாக ஆசிரியர் சித்ரா வரவேற்றார். முடிவில் நகர்ப்புற சுகாதார செவிலியர் சாரதா நன்றி கூறினார்.

The post தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: