அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட, மாநில அளவிலான மன்ற போட்டி பிப்.14ல் தொடக்கம்: வெற்றி பெற்றால் வெளிநாடுக்கு கல்வி சுற்றுலா

சென்னை: அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட, மாநில அளவிலான மன்றப் போட்டிகள் வருகிற 14ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்ந்து அவர்களின் தனித்திறன்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த வானவில் மன்றம், பேச்சு, கட்டுரை உள்ளிட்டவை அடங்கிய இலக்கியம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படம் திரையிடல் போன்ற மன்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன.

அதன்படி, 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட, மாநில அளவிலான மன்றப் போட்டிகள் வருகிற 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளன. இதில் மாவட்ட அளவிலான மன்ற போட்டிகள் வருகிற 14, 15 மற்றும் 16ம் தேதிகளிலும், மாநில அளவில் வருகிற 22ம் தேதி முதல் அடுத்த மாதம் (மார்ச்) 7ம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு போட்டிகளும் எங்கு, எப்படி நடத்தப்பட வேண்டும்? ஒவ்வொரு போட்டிக்குமான கால அளவு எவ்வளவு? அதற்கான நடுவர் குழுவில் யார் யார்? இடம்பெற வேண்டும், கருப்பொருள் என்ன? ஆகியவை அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது. மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளில் மன்றம் வாரியாக தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.

 

The post அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட, மாநில அளவிலான மன்ற போட்டி பிப்.14ல் தொடக்கம்: வெற்றி பெற்றால் வெளிநாடுக்கு கல்வி சுற்றுலா appeared first on Dinakaran.

Related Stories: