ஆண்டிபட்டி ஒன்றியம் ரெங்கசமுத்திரம் ஊராட்சியுடன் லட்சுமிபுரம் ஏடி காலனியை உடனே இணைக்க வேண்டும்

*வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு வாங்க வழிகாட்டுங்கள்

*மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சுமார் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் லட்சுமிபுரம் கிராமம் உள்ளது. இந்த லட்சுமிபுரம் கிராமத்திற்கு அருகே ஆதிதிராவிடர் காலனி அமைந்துள்ளது. ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். பெரும்பாலான மக்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இந்த காலனி ரெங்கசமுத்திரம் ஊராட்சியும் இல்லாமல், டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியும் இல்லாமல் உள்ளது. ஆதிதிராவிடர் காலனியில் வசிப்பவர்களுக்கு ஓட்டு போடும் உரிமை ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் உள்ளதாகவும், ஆனால் வளர்ச்சி பணி மற்றும், அடிப்படை வசதிகளுக்கு ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் உள்ளதாக ரெங்கசமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த காலனி மக்கள் உள்ளாட்சி தேர்தலில் ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்கு வாக்களித்து வருகின்றனர். ஆனால் ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் இருந்து ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை. இங்கு வசிப்பவர்கள் வீட்டு வரி ரசீது, குடிநீர் இணைப்பு, வீடு கட்டுவதற்கு அப்ரூவல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் இந்த பகுதி மக்களுக்கு ரெங்கசமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் எந்த வசதிகளும் செய்து தராமல் உள்ள நிலையில், தொடர் கோரிக்கைக்கு ஏற்ப டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் சிறிய அளவிலான அடிப்படை வசதிகளை செய்து தருகின்றனர். ஆனால் முழுமையான அடிப்படை செய்து தர டி.ராஜகோபலன்பட்டி ஊராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. மேலும் வீட்டு வரி, தண்ணீர் இணைப்பு, வீடு கட்டுவதற்கான அப்ரூவல் வழங்குவதற்கு இந்த 2 ஊராட்சிகளுமே முன்வரவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆதிதிராவிடர் காலனியில் அடிப்படை வசதிகள் இல்லை, சாலை வசதி இல்லை, கழவுநீர் வெளியேற்றுவதற்கு வாறுகால் வசதிகள் இல்லை. தெரு விளக்குகள் போதுமானதாக இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆனால் லட்சுமிபுரம் கிராமம் ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் உள்ளதால் அங்கு அடிப்படை வசதிகளும், வளர்ச்சி பணிகளும் தொடர்ந்து செய்து வருகின்றனர். அருகில் உள்ள லட்சுமிபுரம் ஆதிதிராவிடர் காலனியில் எந்த வசதியும் இல்லாமல் உள்ளது‌.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த எத்திராஜ் கூறுகையில், ‘‘கடந்த 40 வருடங்களாக இதே நிலைமை நீடித்து வருகிறது. அவ்வப்போது டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நிர்வாகம் மட்டும் ஏதோ செய்து வந்தனர். ரசீதும் ஊராட்சி மன்ற தலைவர்களை பொறுத்தே அடிக்கடி செய்து வருகின்றனர். ஆனால் ரெங்கசமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் எங்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்யவில்லை. ஆனால் ரெங்கசமுத்திரத்தில் வாக்களிக்களிக்கிறோம். நாங்கள் புதிதாக வீடு கட்டியுள்ளோம். வீடு கட்டும் போது,‌ தற்காலி கட்டிட மின் இணைப்பு வாங்கியுள்ளோம்.

தற்போது வீடு கட்டி முடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் வீட்டு வரி ரசீது எந்த ஊராட்சி நிர்வாகமும் தராததால், தற்போது வரை வீட்டு மின் இணைப்பு வாங்க முடியாமல், கட்டிட மின் இணைப்பில் தான் உள்ளது. எங்கள் வீட்டிற்கு அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் போதுமானதாக இருக்கும். ஆனால் வீட்டு இணைப்பு வாங்க முடியாததால் மாதம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். இதற்கு வீட்டு வரி ரசீது தராததே காரணம். 2 ஊராட்சி நிர்வாகத்திற்கு சென்றாலும் மாறி மாறி தகவல் தெரிவிக்கின்றனர்.‌ இதேபோல் பலரும் வீடு கட்டி முடித்து விட்டு மின் இணைப்பை மாற்ற முடியாமல் உள்ளனர்.

இந்த காலனி பகுதியை சேர்ந்தவர்கள் பல முறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம்‌ நாங்கள் ரெங்கசமுத்திரத்தில் வாக்களிப்பதால் எங்கள் பகுதியையும் ரெங்கசமுத்திரத்தில் இணைத்து விடுங்கள் என்று பலமுறை மனு அளித்துள்ளோம். அல்லது டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் முழுமையாக இணைத்து வளர்ச்சி பணிகள் செய்யுங்கள் என்று தெரிவித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தங்கள் பகுதியை ரெங்கசமுத்திரம் கிராமத்தில் இணைத்து முறையாக அனைத்து ரசீதுகளை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

The post ஆண்டிபட்டி ஒன்றியம் ரெங்கசமுத்திரம் ஊராட்சியுடன் லட்சுமிபுரம் ஏடி காலனியை உடனே இணைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: