கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள 3 நாள் விழிப்புணர்வு பயிற்சி: டிரைவர், கண்டக்டர்களுக்கு கையேடு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தலின்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையக் கூட்டரங்கில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் இணைந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதார மேம்பாட்டு என்னும் தலைப்பில் பேருந்து முனையத்தை சுத்தமாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கான மூன்று நாள் விழிப்புணர்வு பயிற்சி நேற்று முதல் தொடங்கியது.

இதை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சிறப்பு அலுவலர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். வாழ்வியல் பயிற்சி கருத்தாளர் பாஸ்கர் ஆரோக்கியம் மற்றும் சுகாதார மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஓட்டுநர்களும் நடத்துனர்களும் மகிழ்ச்சிகரமாக பயிற்சியில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை கூறினர். பேருந்து முனைய சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், தங்கும் இடத்தை சுத்தமாகவும் பயன்படுத்துவதாக உறுதி அளித்தனர்.

பின்னர் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழும குழு, பேருந்து முனையத்தில் உள்ள வசதிகளை அறிந்துகொள்ள பேருந்து முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு எங்கெங்கே என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை நேரில் காண்பித்து, முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறப்பட்டது. அனைவருக்கும் காவேரி மருத்துவமனை மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பயிற்சியை 3 நாட்கள் நடத்துவதற்கும் ஒவ்வொரு நாட்களும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் காலையிலும், மாலையிலும் இரு குழுக்களாக பயிற்சி கொடுக்கப்பட்டது.

நேற்று காலையில் நடந்த பயிற்சியில் 26 நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களும், மாலையில் நடந்த பயிற்சியில் 28 நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் சுகாதார மேம்பாடு, பேருந்து முனைய சிறப்பு அம்சங்கள் பற்றிய கையேடும் பயிற்சியும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இத்தகைய பயிற்சிகள் அளிக்கவேண்டும் என்று டிரைவர், கண்டக்டர்கள் கூறினர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள 3 நாள் விழிப்புணர்வு பயிற்சி: டிரைவர், கண்டக்டர்களுக்கு கையேடு appeared first on Dinakaran.

Related Stories: