காஞ்சிபுரம், புதுச்சேரி உள்பட 4 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சந்திப்பு

சென்னை: கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியது. அப்போது வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் வகையில் பணியாற்றுமாறு குழுவினர் வலியுறுத்தினர். திமுகவில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறது. அப்போது நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளையும் குழு கேட்டறிந்து வருகிறது. மேலும் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளையும், தேர்தல் வியூகங்களையும் குழு வழங்கி வந்தது. இந்நிலையில் 11வது நாளான நேற்று காலை கரூர், திண்டுக்கல் தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது. இவர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆலோசனை நடத்தினர். நிர்வாகிகளிடம் தொகுதி நிலவரம்-தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் உள்ளிட்டவை குறித்து குழுவினர் கலந்துரையாடினர்.

அப்போது, வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் வகையில் தேர்தல் பணியாற்றுமாறு குழுவினர் கேட்டுக்கொண்டனர். திண்டுக்கல் தொகுதி நிர்வாகிகளிடம் கடந்த மக்களவை தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. அதேபோல, இந்த முறையும் பெற்றிடும் வகையில் உழைக்க வேண்டும் என குழுவினர் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து, மாலையில் காஞ்சிபுரம், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது. அப்போது தொகுதி நிர்வாகிகள் கருத்துகளை குழுவினர் கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து கடந்த 24ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது.

* 3,405 பேர் பங்கேற்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் சந்திப்பு கடந்த 24ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி (நேற்று) வரை நடந்தது. நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பொறுப்பு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டலக் குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவர்கள், ஒன்றியக் குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் என மொத்தம் 3,405 பேர் கலந்துகொண்டனர். இதில் 617 பேர் மகளிர் நிர்வாகிகள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர்ஆலோசனை நடத்தியதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.

The post காஞ்சிபுரம், புதுச்சேரி உள்பட 4 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: