அடையாறு, கூவம் கரையோரங்களில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: அடையாறு, கூவம் கரையோரங்களில் பொழுதுபோக்கு பூங்கா விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டிட வளாகத்தில் நேற்று நடந்த விழாவில், மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரற்று வாரியத்தின் சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பிலான முடிவுற்ற 13 திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ரூ.152.67 கோடி மதிப்பிலான 52 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: வேகமாக நகரமயமாகும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக சென்னையும், சென்னையின் மக்கள் தொகையும் இன்று விரிவடைந்து செல்கிறது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப சென்னை மாநகராட்சி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்று சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத வகையில் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய தேவைகள் அனைத்தும் நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகிறது.

முதல்வரின் கனவுத் திட்டமான சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்காக ரூ.500 கோடியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் சென்னையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளது. அடையாறு, கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோரங்களில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த பணிகளும் சென்னை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது.

மேலும், கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்கவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான பல்வேறு திட்டங்களை சென்னைக்காக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். சென்னையில் ஏற்பட்ட கனமழை பாதிப்புகளின்போது, களத்தில் இருந்து இரவு பகல் பாராமல் பணியாற்றியவர்கள் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டதில் மாநகராட்சிக்கு மிகப்பெரிய பங்குண்டு. கடந்த 2015ம் ஆண்டு இதேபோல் சென்னையில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது.

அப்போது கிட்டத்தட்ட 10 முதல் 12 நாட்கள் சென்னை முடங்கிப்போனது. ஆனால், தற்பொழுது பெய்த கனமழையிலிருந்து இரண்டே நாட்களில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது என்றால், அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பங்கு மிகவும் இன்றியமையாதது. மேயர் தொடங்கி, உயர் அலுவலர்கள், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தூய்மைப் பணியார்கள் அனைவரும் களத்தில் நின்று சிறப்பாகப் பணியாற்றியதால்தான் சென்னை நகர் இயல்பு நிலைக்கு உடனடியாக வந்தது.

மழை வெள்ள நேரத்தில் பலர் எவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்தாலும், அதைப் பற்றி கவலை கொள்ளாமல், மக்கள் பணியை கருத்தில் கொண்டு அனைத்துப் பகுதிகளையும் சரிசெய்த பெருமை நம் சென்னை மாநகராட்சிக்கு உண்டு. சென்னையை மீட்ட கையோடு சிறிதும் ஓய்வெடுக்காமல் சாலைப் பணிகள், குடிநீர் இணைப்பு, கழிவுநீர் அடைப்பு, தூய்மைப் பணி உள்ளிட்ட தங்களது பணிகளில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மீண்டும் சிறப்பாக செய்யத் தொடங்கிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. சென்னையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் உங்களுடைய பெயர் எழுதப்படும். உங்களது பணி சிறக்க இந்த அரசு என்றும் உங்களுக்கு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post அடையாறு, கூவம் கரையோரங்களில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: