கரும்பு விற்பனை அமோகம்

 

ஓமலூர், பிப்.5: பொங்கல் பண்டிகையை தொடர்ந்து கோயில் திருவிழாக்கள் களை கட்டியுள்ளதால் ஓமலூர் வட்டாரத்தில் செங்கரும்பு விற்பனையும், விலையும் அதிகரித்துள்ளது. பொங்கலை எதிர்நோக்கி, ஓமலூர், காடையாம்பட்டி வட்டார பகுதியில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர். நடப்பாண்டு பன்னீர் கரும்பு விற்பனையும் நன்றாக இருந்தது. பொங்கல் பண்டிகையின்போது ஒரு ஜோடி கரும்புக்கு ₹50 ரூபாய் முதல் ₹60 வரை கிடைத்தது. இதனால், பண்டிகை நேரத்திலேயே பெரும்பாலான விவசாயிகள் கரும்பை விற்பனை செய்தனர்.

இந்நிலையில், பொங்கலுக்கு பிந்தைய கரும்பு விற்பனை, பொங்கல் பண்டிகையை விட நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, அனைத்து கிராமங்களிலும் மாரியம்மன், காளியம்மன் கோயில் விழாக்கள் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு குடும்பத்தோடு வருபவர்கள், வீடு திரும்பும்போது கரும்பு வாங்கிச்செல்கின்றனர். இதனையொட்டி, செங்கரும்பு விற்பனை அதிகரித்துள்ளது. பொங்கல் பாண்டிகையின் போது, 50 ரூபாய்க்கு விற்ற ஒரு ஜோடி கரும்பு தற்போது 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் சந்தை கூடுகிறது. சந்தைகளிலும் செங்கரும்பு விற்பனை அதிகரித்துள்ளது. விலையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

The post கரும்பு விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: