சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் முறைகேடு தொடர்பாக கடந்த 2018ல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணையை முடிக்கவில்லை என்று ஒளிப்பதிவாளர் சங்க செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல் நிலையத்தில் ஆஜரானது தொடர்பாக தவறான தகவல்களை அளித்ததற்காக இளவரசு சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், மன்னிப்பு கேட்டுள்ளதால் இந்த விவகாரத்தை கைவிடுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதி, சங்கத்தில் முறைகேடு நடப்பதாக 2018ல் அளித்த புகார் மீது முழுமையாக விசாரணை நடத்தி முடிக்கவில்லை. பெரும்பாலான வழக்குகளில் இதுதான் நிலை. பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு வந்து தான் தங்களுக்கான நியாயத்தை பெற வேண்டியுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்த பின்னர் அவசர, அவசரமாக சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளவரசுவின் புகார் குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்காததால் 2022 மார்ச் முதல் 2023 செப்டம்பர் வரை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களாக இருந்த அனைவரும் பிப். 5ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
The post தவறான தகவலுக்கு நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார் ஒளிப்பதிவாளர் சங்க முறைகேடு புகார் இன்ஸ்பெக்டர்கள் ஆஜராக வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.