குளிர் காலத்தில் வறண்ட சருமத்தைப் பாதுகாக்கும் வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

சிலருக்கு இயல்பாகவே வறண்ட சருமம் இருக்கும். இதுவே, குளிர்காலத்தில் காற்றில் உள்ள ஈரப்பதத்தால், சருமத்திலுள்ள நீர்ச்சத்து முழுவதும் உறிஞ்சப்பட்டு, சருமம் மேலும் அளவுக்கு அதிகமாக வறட்சியடைகிறது. என்ன செய்தால் இந்த வறண்ட சருமத்தை சரிசெய்ய முடியும் என்று பார்க்கலாம்:

குளிர்காலத்தில் வானிலை மாற்றத்தின் காரணமாக அதிகப் பனிப் பொழிவு ஏற்படுவதால், காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இதனால் குளிர்காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் தானாகவே உறிஞ்சப்பட்டு, சருமத்தில் உள்ள ஈரப்பதம் முற்றிலுமாக குறைந்து போகிறது. இதன்காரணமாகவே, சருமம் அதிகமாக வறட்சி அடைந்துவிடுகிறது.

நார்மலான சருமமே இப்படி வறட்சி அடையும்போது, ஏற்கெனவே வறண்ட சருமம், மேலும் வறண்டு சருமத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், சருமம் மேலும் பொலிவிழந்து காணப்படுகிறது. அதனால் குளிர்காலத்தில் சருமப் பிரச்சினைகள் எதுவும் வராமல், வறட்சியின்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில ஆரோக்கியமான சருமப் பராமரிப்பு முறைகள் தேவை. அவை என்ன எவ்வாறு கடைப்பிடிக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

குளிர் காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அதனால் சருமத்திலுள்ள மாய்ஸ்ச்சரும் குறைய ஆரம்பிக்கும். சருமத்தில் மாய்ஸ்ச்சர் குறைவாக இருப்பதும் சருமம் வறட்சியடைய மிக முக்கியமான காரணம். அதனால் வழக்கத்தை விட அதிகமாக சருமத்திற்கு மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்வது மிக முக்கியம். முகத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலுக்கும் மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்வது நல்லது. இது உடலை வறட்சி அடைய செய்யாமல் தடுக்கும்.

சருமத்தின் மீது இறந்த செல்கள் படிந்துகொண்டே போவது இன்னும் கூடுதலாக சருமத்தை வறட்சியடையச் செய்யும். அதனால் முகத்தை ஸ்கிரப் செய்வது போல ஒட்டுமொத்த உடலையும் எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டியது முக்கியம். சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி எக்ஸ்ஃபோலியேட் செய்வது மிக முக்கியம். அதற்கு மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பாடி ஸ்கிரப் வாங்கியும் பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலேயே காபி பொடியுடன் சர்க்கரை சேர்த்து ஸ்கிப்பாக பயன்படுத்தலாம். ஆளி விதையை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்து, அதை ஸ்கிரப்பாகவும் பயன்படுத்தலாம். இவையிரண்டுமே சருமத்திலுள்ள நாள்பட்ட இறந்த செல்களை நீக்கி, புது செல்கள் உருவாக வழிவகுக்கும்.

சிலர் சருமம் அதிக வறட்சியாக இருக்கும்போது நன்கு தேய்த்துக் குளித்தால் வறட்சி போய்விடும் என்று நினைத்து, வெவ்வேறு சோப் வாங்கிப் பயன்படுத்துவார்கள். இது மிக தவறான முறையாகும். இதனால் சருமம் மேலும் வறண்டு போக வாய்ப்பு அதிகம். மற்ற பருவத்தை விட, குளிரில் அதிக ரசாயனங்கள் இல்லாத, மென்மையான சோப்பாக பயன்
படுத்துவது முக்கியம். இப்போது மார்க்கெட்டுகளில் கெமிக்கல்கள் இல்லாத ஆர்கானிக் சோப்புகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது மூலிகைகள், கடலை பருப்பும், பச்சைபயறும் சேர்த்து அரைத்த குளியல் பொடியை பயன்படுத்துவது சிறந்த நிவாரணமாகும்.

நீராவி பிடிப்பது சருமத்துக்கு வெவ்வேறு வகைகளில் பயன்தரக் கூடியது. முகத்துக்கு நீராவி பிடிப்பது போல, ஒட்டுமொத்த உடலுக்கும் நீராவி பிடிப்பது நல்லது. இது சரும வறட்சியை போக்கும். இவற்றை அருகில் உள்ள அழகு நிலையங்களில் சென்று செய்து கொள்ளலாம். இதனால், சருமத்தின் மேற்புறத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவது மட்டுமின்றி சருமத்தின் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். சருமத் துளைகளுக்குள் சென்று அழுக்குகளையும் வெளியேற்றும். இதனால் சருமம் மேலும் வறட்சியடையாமலும் செதில் செதிலாக தோல் உரியாமலும் தடுக்க முடியும்.

குளிர்காலம் என்றாலே நாம் பெரும்பாலும் சுடு தண்ணீரில் குளிப்போம். ஏற்கெனவே சருமம் வறட்சியாக இருக்கும். இதில் சுடு தண்ணீரில் குளிக்கும்போது உடலில் இருக்கும் கொஞ்ச மாய்ஸ்ச்சரும் குறைந்து போய்விடும். இதனால் சருமம் அதிகளவில் வறண்டு போய்விடும். அதற்காக குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும் என்பதில்லை. சூடு அதிகம் இல்லாத வெதுவெதுப்பான நீரில் குளிப்பதுதான் குளிர்காலத்துக்கு சிறந்ததாகும். வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் போது உடல் வெப்பநிலையை சீர்படுத்தி, ஓரளவுக்கு சரும வறட்சியைத் தடுக்க முடியும்.

உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். நீர் உடலின் செல்களில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. எனவே அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக இந்தப் பருவத்தில் அவ்வளவாக தாகம் எடுக்காது என்பதால், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கிறோம். இதனால் நமது சருமம் மேலும் வறட்சியடைகிறது. எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதே நேரத்தில், அதிகப்படியான காபி அல்லது தேநீர் அருந்துவதை தவிர்க்கவும். ஏனெனில் அவை குளிர்காலத்தில் நீரிழப்பு மற்றும் தொய்வுக்கான காரணமாக அமைந்துவிடும்.

தொகுப்பு: ரிஷி

The post குளிர் காலத்தில் வறண்ட சருமத்தைப் பாதுகாக்கும் வழிகள்! appeared first on Dinakaran.

Related Stories: