சைக்களத்தான் போட்டி காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் 3 நாள் போக்குவரத்து மாற்றம்: தாம்பரம் காவல் ஆணையரகம் தகவல்

 

தாம்பரம், ஜன.26: சைக்களத்தான் போட்டி காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் இன்று முதல் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா யுத் கேம்ஸ் ஒரு பகுதியாக, கிழக்கு கடற்கரை சாலையில், இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தேதிகளில் காலை 5 மணி முதல் 12 மணி வரை சைக்களத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.

அதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் சந்திப்பிலிருந்து மாமல்லபுரம் மார்கத்தில் வாகனங்கள் செல்ல முழுவதும் தடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு கிழக்கு கடற்கரை சாலையை முழுவதுமாக தடுப்பதால் வாகனங்களை மாற்று வழியில் ஓஎம்ஆர் சாலை மார்கமாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அக்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவளம் சந்திப்பில் வலது புறம் திரும்பி ஓஎம்ஆர் சாலையை அடைந்து இடது புறம் திரும்பி கேளம்பாக்கம், திருப்போரூர் வழியை பயன்படுத்தி செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து போக்குவரத்து தங்கு தடையின்றி மாற்று பாதையில் செல்ல ஒத்துழைப்பு நல்குமாறு தாம்பரம் மாநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சைக்களத்தான் போட்டி காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் 3 நாள் போக்குவரத்து மாற்றம்: தாம்பரம் காவல் ஆணையரகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: