செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையை நிர்வகிக்கும் தற்காலிக குழு பிப்.8 வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் நிர்வாக குளறுபடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இந்நிலையில் சங்கத்தை நிர்வகித்து வந்த நிர்வாக குழுவின் தலைவர் பதவி விலகியதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தலைமையில் சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்து 2023 ஜனவரி 27ம் தேதி ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

6 மாதங்களுக்குப் பிறகு இந்த குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. குழுவின் பதவிக்காலம் ஜனவரி 26ம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது. இந்நிலையில், தற்காலிக குழு தொடர்ந்து செயல்பட உத்தரவிடக் கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் செஞ்சிலுவைச் சங்க உப கிளை செயலாளர் செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு கிளைக்கு மாநில நிர்வாக குழுவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு சற்று கால அவகாசம் தேவை என்பதால் தற்போது சங்கத்தை நிர்வகித்து வரும் தற்காலிக குழு பிப்ரவரி 8ம் தேதி வரை நீடிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தற்காலிக குழு சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளை மட்டும் கவனிக்க வேண்டுமே தவிர, எந்த கொள்கை முடிவையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையை நிர்வகிக்கும் தற்காலிக குழு பிப்.8 வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: