காலை முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்து வரும் ஆம்னி பேருந்துகள்: பயணிகளை இறக்கிவிட்டபின் காலி பேருந்துகள் சென்னைக்குள் செல்ல போலீசார் அனுமதி

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய ஆம்னி பேருந்துகள் வந்து கொண்டிருக்கின்றன. காலை 8 மணி நிலவரப்படி சுமார் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்கள். தொடர்ந்து ஆம்னி பேருந்துகளின் வருகை அதிகமாகவே காணப்படுகிறது. இங்கு கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆம்னி பேருந்துகள் வந்த வண்ணம் உள்ளன

பேருந்து நிலையத்தின் உள்ளே வரும் ஆம்னி பேருந்துகளுக்கு 24 மணி நேரத்திற்கு 150 ரூபாய் நுழைவு கட்டணமாகவும், பார்க்கிங் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகள் தேவைப்பட்டால் இங்கு உள்ள பணியில்லா பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது 100க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன. பயணிகளை இறக்கி விடும் மற்ற ஆம்னி பேருந்துகள் மீண்டும் சென்னைக்கு செல்கின்றனர். டிராவல்ஸ் நிறுவனங்களின் ஷெட்டிற்க்கு பேருந்துகளை எடுத்துச் செல்ல காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் ஆம்னி பேருந்துகளில் வரும் பொதுமக்கள், பேருந்து நிலையத்திலிருந்து மாநகரப் பேருந்துகள் மூலமாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். தென் மாவட்டத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பயணிகளுக்கும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உணவகம் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறைந்த விலையில் உணவு கிடைக்க நல்ல உணவகமே அமைத்து தர ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post காலை முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்து வரும் ஆம்னி பேருந்துகள்: பயணிகளை இறக்கிவிட்டபின் காலி பேருந்துகள் சென்னைக்குள் செல்ல போலீசார் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: