தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர், மகன் மீது இளம்பெண் பரபரப்பு புகார் தெரித்துள்ளார். தூத்துக்குடி அண்ணாநகர் 3வது தெருவை சேர்ந்த சேனமுத்து மகள் சுகந்தி (35). இவர், நேற்று முன்தினம் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லபாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் மீது புகார் தெரிவித்து மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று இருவரும் விசாரணைக்கு ஆஜராகினர். பின்னர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த சுகந்தி நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங்குடன் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தேன். அப்போது, அவர் எனது பெயரில் வீடு வாங்குவதாக கூறி என்னிடம் இருந்த ரூ.30 லட்சம், 22 பவுன் நகைகள் மற்றும் 13 தங்க காயின் ஆகியவற்றை வாங்கினார். ஆனால் வீட்டை அவரது பெயரில் பத்திரம் முடித்துக் கொண்டார். அன்னை தெரசா நகரில் உள்ள அந்த வீட்டில்தான் வசித்து வந்தோம். இந்த வீட்டை எனக்குத் தெரியாமல் விற்பதற்கு அவரும், அவரது தந்தை சி.த.செல்லப்பாண்டியனும் சேர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நான் கேட்டபோது, என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்று விட்டார். கடந்த 5 மாதங்களாக அவரது குடும்பத்தினருடன் சேர்ந்துகொண்டு என்னை மிரட்டி வருகிறார். அவரது தந்தை, தாய் ஆகியோர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர். ஞானராஜ் ஜெபசிங் மீது ஏற்கனவே முந்திரி லாரி கடத்தல் உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளது. அவரது தந்தை அமைச்சராக இருந்தபோது எனது வீட்டின் மீது வெடிகுண்டு வீசி மிரட்டினர். அந்த புகாரையும் என்னை மிரட்டி வாபஸ் வாங்க வைத்தனர். தற்போது மீண்டும் என்னை மிரட்டி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பும் வீட்டுக்கு வந்த ஞானராஜ் ஜெபசிங் என்னிடம் தகாராறு செய்து, என்னை தாக்கிவிட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். போலீசார் விசாரிப்பதாக கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எனது புகாரை வழக்குப் பதிவு செய்யாமல் தடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post ரூ.30 லட்சம், நகைகள் வாங்கி மோசடி, கொலை மிரட்டல் அதிமுக முன்னாள் அமைச்சர், மகன் மீது தூத்துக்குடி இளம்பெண் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.