பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நிலக்கடலை செடிகளில் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

*காப்பீடு வழங்க தா.பழூர் விவசாயிகள் வலியுறுத்தல்

தா.பழூர் : நிலக்கடலை செடிகளில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த தா.பழூர் பகுதியில் மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. நிலக்கடலை பயிருக்கும் காப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் தா.பழூர், கோடங்குடி, சிந்தாமணி, அனைக்குடம், சிலால், இருகையூர், கார்குடி, காரைக்குறிச்சி, வேணாநல்லூர், கோட்டியால், புரந்தான், காசாங்கோட்டை, பாண்டிபஜார், நடுவலூர், பூவந்தி கொள்ளை, சுத்தமல்லி, பருக்கள், அழிசுகுடி, வெண்மான் கொண்டான், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் விவசாயிகள் கார்த்திகை பட்டம் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.

காலம் கடந்து பெய்த பருவ மழையால் காலதாமதமாக கடலை பயிர் செய்ததால் பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.90 லிருந்து 100 நாட்கள் வரை சாகுபடி செய்யும் நிலக்கடலை சில இடங்களில் செடிகளில் பூக்கள் பூக்க ஆரம்பித்து உள்ளது. அதிக இடங்களில் கடலை இறங்கும் பருவத்தில் உள்ளது.இது போன்ற சூழ்நிலையில் கடலை செடியில் பூச்சி தாக்கத்தால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். காலம் கடந்து பெய்த பருவ மழையால் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் தொடரும் பனி பொழிவும் இது போன்ற பூச்சி தாக்கத்திற்கு காரணம். தற்போது செடிகள் நன்கு வளர்ந்து பூக்கள் பூத்து நிலக்கடலை செடிகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள் மஞ்சள் நோய், அசுனி நோயை கட்டுப்படுத்தவும், புழு, பூச்சிகளை கட்டுப்படுத்தவும் மருந்து தெளிக்கும் இயந்திரம் மூலம் மருந்துகளை தெளித்து வருகின்றனர். காய் பிடிப்பதற்கும் மருந்து தெளித்து வருகின்றனர்.

இதுகுறித்து காடுவெட்டான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளையராஜா கூறும்போது தற்போது ஏற்பட்டிருக்கும் பூச்சு தாக்கத்தால் 4 முறைகளுக்கு மேலாக மருந்து தெளித்து உள்ளதாகவும் இதனால் பூச்சிகள் அழியவில்லை. ஏக்கருக்கு 2500 ரூபாய் வீதம் 4 முறை 10000 ரூபாய்க்கு மருந்து தெளித்தும் பூச்சிகள் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறுகின்றார். மேலும் தற்போது செடியின் அடியில் உள்ள இலைகள் புள்ளி விழுந்த நிலையில் உள்ளது. இதனால் இலைகள் கருகி காய்ப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது.

ஆகையால் அதிகாரிகள் கடலை நிலங்களை நேரில் ஆய்வு செய்து. விவசாயிகளுக்கு பூச்சிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளை பரிந்துரை செய்து. மானிய விலையில் மருந்துகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இதுகுறித்து கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில் நெல் சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு அரசு காப்பீடு வழங்கி இழப்பீடு தொகை வழங்குவது போல, கடலை பயிருக்கும் காப்பீடு வழங்கி பூச்சி தாக்கம் ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நிலக்கடலை செடிகளில் மருந்து தெளிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: