‘கோதண்டராமர் கோயிலில் அடக்குமுறை எதுவுமில்லை’ ஆளுநர் குற்றச்சாட்டுக்கு பட்டாச்சாரியார் மறுப்பு

சென்னை: ‘கோதண்டராமர் கோயிலில் அடக்குமுறை எதுவுமில்லை’ என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு கோயிலின் பட்டாச்சாரியார் மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி நேற்றைய தினம் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அங்கு இருந்த பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருவித அச்ச உணர்வுடன் இருந்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயில் பட்டாச்சாரியார் மோகன் முற்றிலும் மறுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கோதண்டராமர் கோயிலுக்கு காலை 8 மணிக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்து வைத்து, கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும், கோயில் தல வரலாறு மற்றும் சிறப்புகள் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டன. இதன் பின்னர் ஆளுநர் 20 நிமிடங்கள் கோயிலை வலம் வந்து தரிசனம் செய்து மகிழ்ச்சியுடன் சென்றார். ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி கோதண்டராமர் கோயிலில் ஏற்பாடுகளை செய்ய கண் உறங்காமல் தூக்கமின்றி அதற்கான பணியில் இருந்ததால் முகம் வாட்டமாக காணப்பட்டு இருக்கலாமே, தவிர வேற ஒரு காரணமும் இல்லை. அதேபோல், ஆளுநருக்கான பாதுகாப்பை பின்பற்றி அவருக்கான வரவேற்பை முறையாக வழங்கினோம். இவ்வாறு கூறினார்.

The post ‘கோதண்டராமர் கோயிலில் அடக்குமுறை எதுவுமில்லை’ ஆளுநர் குற்றச்சாட்டுக்கு பட்டாச்சாரியார் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: