ராகுல் வாகனம் மீது தாக்குதலை கண்டித்து சென்னையில் அசாம் பவன் நாளை முற்றுகை : தமிழக காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது கட்டமாக இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். பாஜக ஆளும் அசாமில் லக்கிம்பூருக்கு ராகுல் நடைப்பயணம் சென்றபோது, அதில் பங்கேற்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்களும் போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காரை வழிமறித்திருக்கிறார்கள். பாஜக குண்டர்களால் நடத்தப்பட்ட இந்த இழிவான தாக்குதல் வெட்கக்கேடானது.

நாட்டிலேயே ஊழல் நடைபெறுவதில் முதலிடத்தில் இருப்பது அசாம் பாஜக மாநில அரசு. இந்த நடைப்பயணம் ஊழல் முதல்வர் ஹிமந்தாவுக்கு பீதியை ஏற்படுத்தியிருப்பதையே இந்த தாக்குதல்கள் வெளிப்படுத்துகின்றன. கொடியவர்களிடமிருந்து நாட்டையும் மக்களையும் மீட்க ஜனநாயக ரீதியாக மேற்கொள்ளப்படும் நடைப்பயணத்தில் காட்டுமிராண்டித்தனமான பாஜகவினர் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு சார்பில் நாளை காலை 11 மணியளவில் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அசாம் பவன் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் எனது தலைமையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ராகுல் வாகனம் மீது தாக்குதலை கண்டித்து சென்னையில் அசாம் பவன் நாளை முற்றுகை : தமிழக காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: