சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடியாக விமான சேவை துவக்கம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வரும் பிப்ரவரி 1ம்தேதி முதல் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நேரடி விமான சேவை துவங்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமான கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.

இதில் பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ராமர் கோயிலுக்கு அதிகளவிலான பக்தர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் எனும் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனம் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னை-அயோத்தி-சென்னைக்கு இடையே நேரடி விமான சேவையை துவங்குகிறது.

சென்னை உள்நாட்டு முனையத்தின் டெர்மினல் ஒன்றில் இருந்து வரும் பிப்ரவரி 1ம் தேதி, வியாழக்கிழமை மதியம் 12.40 மணியளவில் அயோத்திக்கு முதல் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் மாலை 3.15 மணியளவில் அயோத்திக்கு சென்று, பின்னர் அதே விமானம் மாலை 4 மணியளவில் புறப்பட்டு மாலை 6.20 மணியளவில் சென்னை வந்து சேருகிறது. இதில் பயணம் செய்வதற்கு டிக்கெட் கட்டணம் ரூ.6,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 180க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ய முடியும். டிக்கெட் முன்பதிவு கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

* 50 விமான சேவை பாதிப்பு.

போகி பண்டிகை முன்னிட்டு, சென்னை விமானநிலையத்தை சுற்றிலும் புகைமூட்டம் காணப்பட்டது. மேலும் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதையே தெரியாமல் 50க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை, புறப்பாடு சேவைகள் பாதிக்கப்பட்டன. இதன்காரணமாக சிங்கப்பூர், லண்டன், இலங்கை, டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த 4 விமானங்கள் ஐதராபாத்துக்குத் திருப்பிவிடப்பட்டன. மஸ்கட், துபாய், குவைத், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் உள்பட 21 வருகை விமானங்களும் பிற இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டெல்லி, அந்தமான், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்பட 24 விமானங்களின் புறப்பாடு பாதிக்கப்பட்டு விமானநிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.25 மணியளவில் அந்தமான் செல்லவேண்டிய தனியார் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதுவரை 50 விமானங்களின் வருகை, புறப்பாடு சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். போகி பண்டிகையை முன்னிட்டு தேவையில்லாத பொருட்களை தீயிட்டு எரித்ததால் 50க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடியாக விமான சேவை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: