திண்டுக்கல்: ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ED அதிகாரி அங்கித் திவாரியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திண்டுக்கல் ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி இவர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கடந்த 6 மாதத்திற்கு முன்பு மதுரை அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரி அங்கித் திவாரி என்பவர் மருத்துவரை தொடர்புகொண்டு, புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 3 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவரிடம் பலமுறை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு இறுதியாக 50 லட்சம் ரூபாய் கொடுத்தே ஆக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார். இதனையடுத்து நவம்பர் மாதம் அங்கித் திவாரியிடம் மருத்துவர் சுரேஷ் பாபு, மதுரை நத்தம் சாலையில் வைத்து முதற்கட்டமாக ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக மருத்துவர் சுரேஷ் பாபு, நவம்பர் 30ம் தேதி இரவு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற ED அதிகாரி அங்கித் திவாரி டிச.1-ல் கைது செய்தனர்.
லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர் விசாரணை நடத்தி குற்ற பத்திரிக்கை தயார் செய்து வருகின்றனர். இந்த வழக்கு திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் புகார்தாரரான அரசு மருத்துவர் சுரேஷ் பாபு, முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாயும், 2ம் கட்டமாக டிசம்பர் 1ம் தேதி 20 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளார். எனவே இந்த பணபரிவர்தனையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா? மேலும் துறை ரீதியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2ம் தேதி அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது 3 நாட்கள் விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்கும் போது தாங்கள் முன்னிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. வாத பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி மோகனா, மனு மீதான உத்தரவு இன்று (12.1.24) பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அங்கித் திவாரியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
The post ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கு: ED அதிகாரி அங்கித் திவாரியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.