பழநி தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார்: காவல்துறை நடவடிக்கை

 

பழநி, ஜன. 1: தைப்பூச திருவிழாவின் பாதுகாப்பு பணிக்கு சுமார் 3 ஆயிரம் போலீசாரை ஈடுபடுத்த காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழா வரும் 19ம் தேதி துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். இத்திருவிழாவில் அசாம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி தைப்பூச திருவிழாவிற்கு சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கேட்டபோது கூறியதாவது, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் எஸ்.பி பிரதீப் வழிகாட்டுதலில் 10 டி.எஸ்.பிக்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 140 சப்.இன்ஸ்பெக்டர்கள், 300 ஊர்க்காவல்ப்படையினர் தென் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளனர்.

தவிர, வெடிகுண்டு நிபுணர் குழு, மோப்பநாய் குழு, போக்குவரத்து போலீசார், பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார் என சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பழநி நகர், அடிவாரம், சண்முகநதி மற்றும் இடும்பன் குளம் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிகமுள்ள கிரிவீதி, அடிவாரம், சுற்றுலா பேருந்து நிலையம், யானைப்பாதை, படிவழிப்பாதை, மலைக்கோயில் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட உள்ளன. வெளிமாநில பக்தர்கள் வசதிக்காக காவல்நிலையத்தில் மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்கவும், ஆங்காங்கே தகவல் மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

The post பழநி தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார்: காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: