2024 புத்தாண்டு தின கொண்டாட்டம் திருவள்ளூர், ஆவடி பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்படுகள்: பொதுமக்களுக்கு கட்டுப்பாடு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி என ஐந்து உட்கோட்டங்களில் 24 காவல் நிலையங்களும் ஐந்து மகளிர் காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. 1100க்கும் மேற்பட்டோர் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று 31ம் தேதி இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் இரவு முழுவதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இதனால் கிறிஸ்தவர்கள் அனைவரும் தேவாலயங்களுக்கு வருகை தந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். அதேபோல் திருத்தணி முருகன் கோயிலும் இரவு முழுவதும் திறந்து வைக்கப்பட்டிருப்பதால் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதே நேரத்தில் புத்தாண்டை கொண்டாடும் நோக்கத்தில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்களை வேகமாக ஓட்டுவது, சாகசத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

அதனை கட்டுப்படுத்தவும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பா. சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் அந்த உட்கோட்டங்களில் டிஎஸ்பி தலைமையிலும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆவடி: ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் அவர்கள் உத்தரவின் பேரில், 2024 புத்தாண்டு கொண்டாட்டம் மகிழ்ச்சியுடன் அமைவதற்கு ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்படுகளை செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆவடி காவல் இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 4000 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு அளிக்க ஆவடி காவல் ஆணையரகம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், காவல் துறையினருக்கு உதவியாக சுமார் 372 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு 9.00 மணியிலிருந்து முக்கியமான இடங்களில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு ஆவடி மற்றும் செங்குன்றம் ஆகிய காவல் மாவட்டங்களில் மொத்தம் 50 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 100 சாலை பாதுகாப்பு குழுக்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள்.

இதை தொடர்ந்து முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி காவல் ஆணையரகம் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.  மேலும், ஆவடி காவல் ஆணையரகம் காவல் துறையின் அறிவுரைகளை கடைபிடித்து புத்தாண்டை கொண்டாடுமாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள்கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

The post 2024 புத்தாண்டு தின கொண்டாட்டம் திருவள்ளூர், ஆவடி பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்படுகள்: பொதுமக்களுக்கு கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: