கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி ஆட்சீஸ்வரர் கோயிலில் ருத்ராபிஷேகம்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவார ருத்ராபிஷேக விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் நகரில் தொண்டை நாட்டு சிவ தலங்களில் ஒன்றானதும், சைவ சமய குறவர்கள் நால்வரால் பாடல் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ருத்ராபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று, இந்த ஆண்டு ருத்ராபிஷேக விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் மாவிலை தோரணங்கள், வாழைக்கன்றுகள் ஆகியவை கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தன.

நேற்று மாலை 5 மணியளவில் வேத பாடசாலை மாணவர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் ஏகா தச ருத்ர பாராயணம் செய்துக்கொண்டே மூலவர் ஆட்சீஸ்வரர் உமையாட்சீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு தொடர்ந்து 11 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, 11 வகையான பிரசாதங்கள் வைத்து தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையும், விழா குழுவினரும் செய்திருந்தனர்.

 

The post கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி ஆட்சீஸ்வரர் கோயிலில் ருத்ராபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: