கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்ட 12 கிராம மக்கள்: 10 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவலம்

திருவள்ளூர்: லட்சுமி விலாசபும் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் 12 கிராம மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் அரக்கோணம் அருகே பாலாற்றில் கலந்து பின் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை அருகே கொசஸ்தலையாற்றில் கலந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது. இந்நிலையில் திருவாலங்காடு ஒன்றியம், லஷ்மி விலாசபுரத்தில் கொசஸ்தலையாற்றை மக்கள் கடந்து செல்ல தரைப்பாலம் அமைக்கப்பட்டிருத்தது. திருவாலங்காடு ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் இந்த தரைப்பாலம் கடந்தாண்டு பெய்த கன மழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையில் மீண்டும் இந்த வஷ்மிவிலாசபுரம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் மீண்டும் உடைந்தது.

இதனால் லட்சுமி விலாசபும், செஞ்சி மதுரா கண்டிகை, பாகசாலை, சிற்றம்பாக்கம், தென்காரணை, பேரம்பாக்கம், மணவூர், குப்பம்கண்டிகை, பழையனூர் திருவாலங்காடு, ராஜபத்மாபுரம், ஜாகீர் மங்கலம் ஆகிய 12 கிராம மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மணவூர் செல்ல வேண்டிய நிலையில் உள்ள வஷ்மிவிலாசபுரம் மக்கள் பாகசாலை வழியாக 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் விரைவில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், கூடுதல் கலெக்டர் வளர்ச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஓ.சுகபுத்ரா, திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் ஆகியோரிடம் திருவலாங்காடு ஒன்றிய கவுன்சிலரும், மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளருமான த.தினகரன் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

 

The post கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்ட 12 கிராம மக்கள்: 10 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவலம் appeared first on Dinakaran.

Related Stories: