பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 3வது முறையாக உபரி நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து மூன்றாவது முறையாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்தது. மேலும் பள்ளிப்பட்டு அருகே ஆந்திரா மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழைக்கு சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்க அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் இரண்டு முறை உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி திறக்கப்பட்டது.

பள்ளிப்பட்டு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள லவா, குசா ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதே நிலையில் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்க அணையிருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பள்ளிப்பட்டு பகுதியில் கரையோர கிராமங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌.
பள்ளிப்பட்டு பகுதி மக்களின் நீராதாரமாக விளங்கும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வரும் கோடையில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த உபரிநீரானது பள்ளிப்பட்டு, நகரி, என்.என்.கண்டிகை வழியாக பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது.

 

The post பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 3வது முறையாக உபரி நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Related Stories: