×

வேலூர் மலைக்கோட்டையை பார்த்து வியப்பு: மராட்டியர்களின் வழித்தடங்களை பார்வையிட வருகை தந்த மகாராஷ்டிர வரலாற்று ஆர்வலர்கள்

வேலூர்: தென்னகத்தில் மராட்டியர்களின் வழித்தடங்களை பார்வையிடவும், ஆய்வு செய்யவும் வருகை தந்துள்ள மகாராஷ்டிர வரலாற்று ஆர்வலர்கள் வேலூர் மலைக்கோட்டையை சுற்றிப்பார்த்து வியந்தனர். இந்தியாவில் முகலாயர்களின் எழுச்சிக்கு தென்னகத்தில் முதல் தடையாக இருந்தது விஜயநகர பேரரசு. இதன் வீழ்ச்சிக்கு பிறகு வீரசிவாஜியின் தலைமையில் எழுந்த மராட்டிய பேரரசு முட்டுக்கட்டையாக இருந்தது. தென்னகத்தில் முகலாயர்களின் படையெடுப்பால் சீர்கெட்ட நிலையை மீட்டெடுக்க சிவாஜியின் தலைமையிலான மராட்டிய படைகள் தெலங்கானா, ஆந்திரா, வடகர்நாடகா பகுதிகளில் பல கோட்டைகளை வென்று தமிழகத்தில் வேலூர், செஞ்சி, தஞ்சாவூர் கோட்டைகளையும் வென்று மராட்டிய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தின.

தமிழகத்தில் தாங்கள் வென்ற பகுதிகளில் மராட்டிய அரசை நிலைநிறுத்த பிரதிநிதிகளுடன் கூடிய படைகளை நிறுத்திவிட்டு சென்றனர். அதோடு தாங்கள் வென்ற பகுதிகளுக்கு பாதுகாப்பாக பல்வேறு மலைக்கோட்டைகளையும் கட்டினர். அவ்வாறு கட்டப்பட்டதுதான் வேலூர் நகரின் அரணாக விளங்கும் வேலூர் மலையின் மீது கட்டப்பட்ட கோட்டைகளின் தொகுப்பாகும். அதேபோல் பரதராமி, கணியம்பாடி என வேலூரை சுற்றிலும் மலைகளில் சிறிய அளவிலான கண்காணிப்பு கோட்டைகளையும் கட்டினர்.

இவ்வாறு தமிழகத்தில் மராட்டியர்களின் சுவட்டை நிரந்தரமாக பதித்த இடங்களை காண, மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் என 200 பேர் கொண்ட குழுவினர் நேற்று வேலூர் வந்தனர். அங்கு அவர்கள் வேலூர் கோட்டையை சுற்றிப்பார்த்ததுடன், ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் வேலூர் சைதாப்பேட்டை மலை, சார்பனாமேடு மலை, காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி மலைகளில் உள்ள கோட்டைகளை சுற்றி பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, ‘வீரசிவாஜியின் வரலாற்றுத்தடங்களை தேடி ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வருகிறோம். நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக பல மகான்களின் துணையுடன் வீரர்கள் பலர் நமது நாட்டில் தோன்றியுள்ளனர். அப்படி மகான் வித்யாரண்யரின் வழிகாட்டுதலில் எழுந்ததுதான் விஜயநகர சாம்ராஜ்யம். இங்கு அவர்களை பற்றிய வரலாற்று ஏடுகளை புரட்டியபோது, தமிழகத்தில் ஏற்பட்டிருந்த கலாச்சார தடுமாற்றத்தையும், முகலாயர்களால் சீரழிக்கப்பட்ட திருக்கோயில்களையும் அவர்கள் எப்படி மீட்டெடுத்தனர் என்பதை அறிய முடிந்தது. அதேபோல்தான் சமர்த்த ராமதாசரின் உந்துதலால் எழுந்தது வீரசிவாஜியின் மராட்டிய சாம்ராஜ்யம். அத்தகைய வீரசிவாஜியின் வரலாற்று தடங்களை தேடியே நாங்கள் இங்கு வந்துள்ளோம். வேலூர் மலைக்கோட்டைகளை பார்த்தபோது வியப்பாக இருந்தது’ என்றனர்.

The post வேலூர் மலைக்கோட்டையை பார்த்து வியப்பு: மராட்டியர்களின் வழித்தடங்களை பார்வையிட வருகை தந்த மகாராஷ்டிர வரலாற்று ஆர்வலர்கள் appeared first on Dinakaran.

Tags : Vellore hill fort ,Maratha ,Vellore ,Marathas ,Dinakaran ,
× RELATED உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்ற மனோஜ் ஜராங்கே