சென்னை எடப்பாடி பழனிசாமி வழங்கிய நிவாரண பொருட்களை வாங்க வந்த 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு..!!

சென்னை: சென்னை ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி வழங்கிய நிவாரண பொருட்களை வாங்க வந்த 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், நிறுவனங்கள், தனி மனிதர்கள் என பல்வேறு தரப்பிலும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கக்கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வடசென்னையில் ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிவாரண பொருட்கள், கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்தது. கூட்டத்தில், மயங்கி விழுந்த சிறுமி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே உயிரிழந்தார்.

மூச்சுத் திணறியோ, மிதிபட்டோ சிறுமி உயிரிழக்கவில்லை என பிரேத பரிசோதனை தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சிறுமி உயிரிழந்தது குறித்து விசாரணை செய்வதற்காக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. நவம்பர் 13ம் தேதி ஆர்.டி.ஓ. இப்ராஹிம் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னை எடப்பாடி பழனிசாமி வழங்கிய நிவாரண பொருட்களை வாங்க வந்த 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: