எழும்பூர், துறைமுகம் தொகுதிகளில் 6,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் : அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட வடசென்னையை சேர்ந்த சென்னை, எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,000 குடும்பங்களுக்கும், துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 4,000 குடும்பங்களுக்கும் இன்று (11.12.2023) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மழைநீர் வெளியேற்றுதல், உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குதல், நோய்தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (11.12.2023), சென்னை, எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 99-வது வார்டு, மெக் நிக்கல் சாலை, சர்வோதயா காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும், புதிய பூபதி நகர், ஓசங்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2,000 குடும்பங்களுக்கும், திருநங்கைகள் காப்பகத்தில் உள்ள திருநங்கைகளுக்கும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 59-வது வார்டை சேர்ந்த டி.என்‌பி.எஸ்.சி சாலை, நாராயணப்பா சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, தேவராஜ் முதலியார் தெரு, மெமோரியல் ஹால் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா ராஜன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.இரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.இளம்சுருதி, திருமதி ராஜேஸ்வரி ஸ்ரீதர், திரு.சுந்தர்ராஜன், திரு.பரிமளம் மற்றும் திரு.முரளி, திரு.ராஜசேகர், திரு.ஜெகதீஷ், திரு.பிரபாகரன், திரு.வேலு திரு.சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post எழும்பூர், துறைமுகம் தொகுதிகளில் 6,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் : அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்!! appeared first on Dinakaran.

Related Stories: