அதிமுக ஆட்சியின் ரூ.8,820 கோடி மழைநீர் வடிகால் எங்கே?: விமர்சனத்துக்கு புள்ளி விபரங்களுடன் திமுகவினர் பதிலடி

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஏற்பட்டு உள்ள பெருமழையை குறிப்பிட்டு, அதிமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ரூ.8,820 கோடியிலான மழை நீர் வடிகால் எங்கே என்று புள்ளி விபரங்களுடன் திமுகவினர் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் சென்னையை புரட்டி போட்டுவிட்டது. சென்னையின் வெள்ளநீரை வெளியேற்றும் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவைகளில் வெள்ளம் கரைபுரண்டோடு ஓடியதால் மழைநீர் வடிகால்கள் மூலம் வெளியேறும் தண்ணீரை உள்வாங்க முடியவில்லை. இதனால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் தேங்கியது. அதுவும் ஓரிரு நாட்களுக்குள் சில தாழ்வான தெருக்களை தவிர மற்ற இடங்களில் படுவேகமாக இயல்பு நிலை திரும்பியது. மற்ற இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டது. முதல்வரும், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பம்பரம் போல் சுழன்று பணியாற்றியதன் விளைவாக இயல்பு நிலை என்பது வேகமாக திரும்பியது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜவினர், பெருமழை என்றும் பாராமல் திமுக அரசின் நடவடிக்கைளை விமர்ச்சித்து வருவது சமூக ஆர்வலர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.4000 கோடி என்னவாயிற்று என்ற கேள்வியை கேட்டு சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருவது, களத்தில் கஷ்டப்பட்டு பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, கடந்த 2015 அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டது. அடையாறு, கூவம் வடிநிலப் பகுதி, கோவளம், கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.4,034 கோடியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார். முதல்கட்டமாக அடையாறு மற்றும் கூவம் வடிநிலப் பகுதியில், உலக வங்கியிடம் நிதி உதவி பெற்று ரூ.1,101.43 கோடி மதிப்பில் 326 கிலோ மீட்டர் தூரம் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று சென்னை மெகா நகர மேம்பாட்டுப் பணி சார்பாக 390 இடங்களின் 125.27 கிலோ மீட்டர் தூரம் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலமாக 141 இடங்களில் 48.28 கிலோ மீட்டர் தொலைவில் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக மத்திய சென்னையில் அடையாற்றில் 406 கிலோமீட்டர் நீளத்துக்கு தமிழ்நாடு நீடித்த நிலையான நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,387 கோடி மதிப்பில் வடிகால் பணிகள் உலகவங்கி நிதி உதவியுடன் முழுமையாக அமைக்கப்பட்டதாகவும் கூறினர். மத்திய சென்னை பகுதியில் எவ்வளவு அதிகமாக மழை பொய்தாலும், இந்த வடிகால்வாய் வழியே அடையாற்றில் கலந்து மழைநீர் கடலுக்குச் சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல், ரூ.1,261 கோடியில் தமிழ்நாட்டில் நீடித்த நிலையான நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் 450 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர். அம்பத்தூர் சிட்கோ கால்வாய், நொளம்பூர் கால்வாய், பாடிக் குப்பம் கால்வாய், நந்தம்பாக்கம் கால்வாய் நீர்வழி கால்வாய் ஆகிய 4 நீர்வழி கால்வாய்கள் 29 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றதாகவும் கூறினர். கடந்த 2017ல் ஸ்டீபன் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை நீர் தேங்கியதாக ரூ.25 கோடியில் 4,180 மீட்டர் நீளத்தில் வடிகால் அமைக்க தமிழ்நாடு அரசின் நகர்ப் புறசாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் எடுத்து கொள்ளப்பட்டு பணிகள் முடிந்ததாகவும், ரூ.200 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

இது அல்லாமல் ரூ.80 கோடியில் மாம்பலம் கால்வாய் சீரமைப்பு மற்றும் கரையோர வடிகால் பணிகள் நடைபெற்றன என்றும், வட சென்னை பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டத்தில் 780 கிலோ மீட்டர் நீளத்தில் மழைநீர் வடிகால் அமைக்க 2020ல் முடிவு செய்யப்பட்டது என்றும், இதற்காக ரூ.3,220 கோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் மூலம் பெறப்பட்டதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக, இத்தகைய மழை நீர் வடிகால் திட்டங்களின் மூலம் சென்னையில் மழை நீர் வெள்ளம் தேங்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் 2021ல் சென்னையில் பெய்த கனமழையின் போதும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது தான் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களின் நிலை மக்களுக்கு தெரிந்தது. எந்தவித முறையான திட்டமிடல் இல்லாமல், பணிகளும் தரமாக இல்லாமல் இருந்தது. அப்போதே இந்த பணிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ரூ.8,820 மதிப்பில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால்கள் எங்கே என்று குறிப்பிட்டு திமுகவினர் புள்ளி விபரங்களுடன் அதிமுகவினருக்கு கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: 2016ம் ஆண்டு பெருமழையின் போதும், 2020ம் ஆண்டு பெய்த கனமழையின் போதும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினின் கால்பதிக்காத இடங்களில்லை. பெருமழை பாதிப்பு என்று குறை கூறும் எடப்பாடி பழனிசாமி, 3 நாட்களாக கனமழை பெய்த போது எங்காவது வந்தாரா, நிவாரண பணிகளை மேற்கொண்டாரா? எல்லா பணிகளும் முடிந்தபிறகு ஒருசில இடங்களுக்கு சென்றுள்ளார். 10 ஆண்டு காலமாக மாநகராட்சியை சீரழித்துவிட்டார்கள். கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது அதிமுகதான். அப்போது ஒழுங்காக செயல்பட்டிருந்தால், இப்போது எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post அதிமுக ஆட்சியின் ரூ.8,820 கோடி மழைநீர் வடிகால் எங்கே?: விமர்சனத்துக்கு புள்ளி விபரங்களுடன் திமுகவினர் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: