×

பதிவுத்துறை இணையதளத்தில் காணாமல்போன வெங்கலேரி கிராமம்: மீண்டும் சேர்க்க கோரிக்கை

திருப்போரூர், டிச.9: வெங்கலேரி கிராமம் பதிவுத்துறை இணைய தளத்தில் காணாமல் போனதால், மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை ைவத்துள்ளனர். பதிவுத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமாகவே செய்யப்படுகின்றன. இந்த பதிவுத்துறை இணைய தளத்தை டாடா கன்சல்டன்சி நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் இந்த இணைய தளத்தின் பக்கங்கள் மேம்படுத்தப்பட்டது.

குறிப்பாக, பல்வேறு குக்கிராமங்கள் இருந்தாலும் பட்டா வழங்கப்படுவது பிரதான கிராமமாக இருந்து வந்தது. ஆனால், ஒரு சொத்தினை பதிவு செய்வோர் குக்கிராமத்தை குறிப்பிட்டு பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். உதாரணத்திற்கு கேளம்பாக்கம் அருகே சாத்தங்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் சொத்துக்களுக்கான வருவாய்த்துறை பட்டா, சிட்டா, வரைபடம் போன்றவை புதுப்பாக்கம் என்ற பிரதான கிராமத்தின் பெயரிலேயே வழங்கப்பட்டு வந்தன. ஆனால், பொதுமக்கள் தங்களது ஆவணங்களில் சொத்து குறித்த கிராமத்தை குறிப்பிடும்போது சாத்தங்குப்பம் என்று குறிப்பிட்டு பதிவுசெய்து வந்தனர். இந்நிலையில், இணைய தள பக்கங்களை மேம்பாடு செய்தபோது குக்கிராமங்கள் நீக்கப்பட்டு பிரதான கிராமங்கள் மட்டுமே இணைக்கப்பட்டது.

இவ்வாறு குக்கிராமங்களை நீக்கம் செய்து இணைய தளம் மேம்பாடு செய்யப்பட்டபோது பிரதான கிராமங்களுள் ஒன்றான வெங்கலேரி என்ற கிராமமும் தவறுதலாக நீக்கப்பட்டு விட்டது. இதனால், கடந்த ஒரு மாதமாக பதிவுத்துறை இணைய தளம் மூலமாக வெங்கலேரி கிராமத்தின் சொத்து பரிமாற்றங்கள், வில்லங்க சான்று கோருதல், ஆவணங்களின் சான்றிட்ட நகல் கோருதல், சொத்தின் வழிகாட்டி மதிப்பு பார்வையிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து திருப்போரூர் சார்பதிவகம் மூலமாக டிசிஎஸ் நிறுவனத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த சரியான புரிதல் இல்லாததால் டிசிஎஸ் நிறுவனம் இப்புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுைவயில் வைத்துள்ளது. ஆகவே, பதிவுத்துறை இணைய தளத்தில் மீண்டும் வெங்கலேரி கிராமத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post பதிவுத்துறை இணையதளத்தில் காணாமல்போன வெங்கலேரி கிராமம்: மீண்டும் சேர்க்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vengaleri ,Tiruppurur ,
× RELATED திருப்போரூர் பத்திரப்பதிவு...