மதுரை அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவின் அருகே அதிக ஒலியுடன் டூவீலர் பயணம்: ஊழியர்களுக்கு நிர்வாகம் அறிவுரை

 

மதுரை, டிச. 9: மதுரை அரசு மருத்துவமனையில் இருதயவியல் சிகிச்சை மையம் அமைந்துள்ள பகுதியில் மருத்துவமனை ஊழியர்கள் டூவீலர்களில் செல்லும் வீடியோ வைரலானது. இதையடுத்து, அந்த ஊழியர்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிவுரை வழங்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் முக்கிய மருத்துவமனையாக செயல்பட்டு வரும் மதுரை அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான புற, உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மதுரை அரசு மருத்துவமனையின் அலுவலர்கள் பணி முடிந்து தங்கள் டூவீலர்களை இருதயவியல் துறை தீவிர அறுவை சிகிச்சை பிரிவு 114 வார்டு நடைபாதையில் அதிக ஒலியுடன் ஓட்டிச் சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், நர்ஸ்கள் சிகிச்சை வார்டு பகுதிகளில் வரக்கூடாது, இது இருதய அறுவை சிகிச்சை வார்டு, வாகன புகை மற்றும் அதிக ஒலி நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தனர்.

ஆனால, இதனை கருத்தில் கொள்ளாத ஊழியர்கள் சிலர், மாற்றுப்பாதையில் பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதால், அந்த வழியாக செல்ல முடியாது என்று கூறிவிட்டு, அடுத்தடுத்து டூவீலர்களை அதிக ஒலியுடன் ஓட்டிச்சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த அரசு மருத்துவமனை நிர்வாகம், ‘இந்த விதிமீறல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும். எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

The post மதுரை அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவின் அருகே அதிக ஒலியுடன் டூவீலர் பயணம்: ஊழியர்களுக்கு நிர்வாகம் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: