எலும்பு வலிமை இழப்பால் ஏற்படும் அவதி!

நன்றி குங்குமம் டாக்டர்

எலும்பிலுள்ள பொருள் திணிவு (bone mass) குறையும்போது அது தன் வலிமையை இழக்கிறது. இதையே எலும்பு வலிமை இழத்தல் (osteoporosis) நோய் என்கிறார்கள். இந்தப் பிரச்னை வந்துவிட்டால், சாதாரணமாக வழுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படும்.

நமது உடலானது எலும்புகளைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இளமையில் இது வேகமாக நிகழ்கிறது. வயதாகும்போது, நாம் இழக்கும் எலும்பு அடர்த்தியானது, புதிதாக உருவாவதைவிட அதிகமாக இருக்கிறது. எனவே, எலும்பானது வலிமையை இழக்கிறது.பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் எலும்பு எளிதில் பலவீனம் அடைகிறது. மாதவிடாய் சீக்கிரம் நின்றுவிடும்.

பெண்கள், மாதவிடாய் நிற்கும் காலத்தில் குறைந்த எடையுள்ள பெண்கள், கால்சியம் சத்துள்ள உணவைக் குறைவாக உண்ணுபவர்களுக்கு ஸ்டீராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு இத்தொல்லை வர வாய்ப்புகள் அதிகம். பெற்றோரில் யாருக்காவது இந்தப் பிரச்னை இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும் வரும்.ஆரம்பநிலையில் எதுவுமே தெரியாது என்பதுதான் இதில் பிரச்னையே. இந்நோய் பல ஆண்டுகளாக மறைந்திருந்து, கடைசியில் எலும்பு முறிவு ஏற்படும்போதே வெளியில் தெரிய ஆரம்பிக்கும்.

கீழே விழாமலேயே எவ்வித அடியும் படாமலேயே எலும்பு முறிவு ஏற்படுவதும் உண்டு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு மற்றும் மணிக்கட்டு ஆகிய இடங்களில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். எலும்பு அடர்த்தி குறைவதால், முதுகுவலி ஏற்படும். முதுகு வளைந்து, உயரம் குறையும். பல செயல்பாடுகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகும். மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.எப்படி கண்டுபிடிப்பதுஎலும்பிலுள்ள பொருள் திணிவு சுமார் 30- 50 சதவிகிதம் குறைந்தால்தான் எக்ஸ்ரே மூலம் கண்டறிய முடியும். இப்பொழுது டெக்ஸா ஸ்கேன் மூலம் இந்நோயை மிக எளிதாக ஆரம்பநிலையிலேயே கண்டறிய முடியும்.

சிகிச்சைகள்

சீக்கிரமே மாதவிடாய் நின்றுவிட்டாலோ, ஸ்டீராய்டு மருந்துகளை மாதக்கணக்கில் எடுத்துக் கொண்டாலோ, இந்தப் பிரச்னை வருவதற்கு முன்பே டாக்டரிடம் ஆலோசிப்பது நல்லது. இந்தப் பிரச்னைக்கு பைய்பாஸ்போனேட்டு மற்றும் கால்சிட்டோனின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் எலும்பு வலிமை இழத்தலுக்கு ஹார்மோன் மருந்து மூலம் சிகிச்சை அளிப்பார்கள். ஆனால், இதைத் தொடர்ந்து சாப்பிடுவதனால் கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். இதை தொடர்ந்து வெகுநாட்களுக்குச் சாப்பிட வேண்டி வரும்.

தடுக்கும் முறை

உடற்பயிற்சிகளினால் எலும்பை உறுதி அடையச் செய்ய முடியும். உதாரணம். வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துதல் மற்றும் ஆசனப்பயிற்சிகள். குறிப்பாக எடை தூக்கும் பயிற்சிகள் போன்றவை எலும்புகளுக்குப் பெரிதும் வலிமை கொடுக்கும்.தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் சூரியஒளி உடலில் படுமாறு இருப்பதன் மூலம் வைட்டமின் டி கிடைக்கிறது. மீன், முட்டைக் கரு, கல்லீரல், பால் போன்றவற்றைச் சாப்பிடுவதாலும் கிடைக்கிறது.

முடியாதவர்கள் வைட்டமின் டி 800 யூனிட் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். இது எலும்பை உறுதி செய்ய மிகவும் உதவும்.
நம் உடலுக்குத் தினமும் 1300 மி.கி. கால்சியம் தேவை. சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள உணவை எடுத்துக் கொள்ளவும். உதாரணம், ராகி, பால், கீரை, கொய்யாப்பழம், மீன், இறால், நண்டு மற்றும் உலர் பழங்கள்.

காபியைக் குறைக்கவும். டீ அருந்துவதனால் எலும்பு பாதிப்பு ஏற்படுவதில்லை.எடை குறைவாக இருந்தால், எலும்பு வலிமை இழக்கும். எடை அதிகமாக இருந்தாலும் எலும்பு முறிவு ஏற்படும். எனவே, உடல் எடையைச் சீராகப் பராமரிக்க வேண்டும்.

பாதுகாப்பு வழிகள்

முதுமையில் நிறைய பேர் தடுமாற்றத்தாலும், வழுக்கி விழுந்தும் எலும்பு முறிவுப் பிரச்னையைச் சந்திக்கிறார்கள். எலும்பு வலிமை இழத்தல் பிரச்னை உள்ளவர்கள். இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டிலும் வெளியிலும் கவனமாக இருக்க, அவர்கள் சில வழிகளைப் பின்பற்றலாம்.

*பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய வேண்டும்.

*எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அளவைக் குறைக்க வேண்டும்.

*வீட்டில் வழுவழுப்பான தரையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*பாத்ரூம் உட்பட எல்லா இடங்களிலும் தேவையான வெளிச்சம் இருக்க வேண்டும்.

*தரையில் தேவையற்ற விரிப்புகள் மற்றும் பொருட்கள் இருந்தால் அகற்றிவிட வேண்டும்.

*படிக்கட்டுகள் மற்றும் குளியல் அறையில் கைப்பிடி அவசியம் பொறுத்த வேண்டும்.

*இடுப்பு எலும்பைப் பாதுகாக்கும் உபகரணத்தை (Hip protectors) பொருத்திக் கொள்வதால் எலும்பு முறிவு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

எலும்பு வலிமையிழத்தல் ஒரு தடுக்கக்கூடிய தொல்லையே. இதற்கென்று தனிப்பட்ட நோயின் அறிகுறிகள் இல்லாததினால், இறுதி மாதவிடாய் ஏற்படும் பருவத்திலிருந்தே சுண்ணாம்புச் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி மூலம் இத்தொல்லையை வராமலேயே தடுத்து உறுதியான எலும்புடன் பெண்கள் மிகழ்ச்சியுடன் வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

தொகுப்பு: ஸ்ரீ

The post எலும்பு வலிமை இழப்பால் ஏற்படும் அவதி! appeared first on Dinakaran.

Related Stories: