×

மத்திய சிறையை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள் சிறைவாசிகளுடன் பாட்டுப்பாடி உற்சாகம்

 

மதுரை, டிச. 8: தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள், ஐந்து பெண்கள் தனிச்சிறைகள் ஆகியவற்றில், தலா ஒரு சமூகவியல் வல்லுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியின் முக்கியத்துவம் குறித்து, மதுரை சமூகவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்க, மதுரை மத்திய சிறை நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, மதுரை சமூகவியல் கல்லூரி, முதுகலை சமூகப்பணி முதலாமாண்டு மாணவ மாணவிகள், 44 பேர் நேற்று மத்திய சிறைக்கு சென்றனர். அப்போது, சிறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூகப் பணிகள் பற்றி சிறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

மேலும், சிறைத்துறை வாயிலாக சிறைவாசிகளை நல்வழிப்படுத்தி அவர்களை, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளும் விளக்கப்பட்டன. முன்னதாக மதுரை, மத்திய சிறையை சுற்றிப்பார்த்த மாணவ, மாணவிகள், சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் தொழிற்பயிற்சிகள், மனநல பயிற்சி வகுப்புகள், கவுன்சிலிங் முறைகள், கைதிகள் பணியாற்றும தொழிற்கூடங்களில், சிறை சந்தை ஆகியவற்றை பார்வையிட்டனர். சிறையில் செயல்படும் ‘வைகை சுந்திரப் பறவைகள்’ இசைக்குழுவினரின் இன்னிசை கச்சேரியை கேட்டு ரசித்ததுடன், சிறைவாசிகளுடன் இணைந்து பாட்டுபாடி மகிழ்ந்தனர்.

கல்லூரி மாணவிகள் கூறுகையில், ‘‘எங்கள் பாடத்திட்டத்தில் பிரிசன் கவுன்சிலிங் என்பது சிறையில் மேற்கொள்ளப்படும் சமூகப்பணிகள் தொடர்பானது. அவற்றை அறிந்து கொள்ள மதுரை மத்திய சிறைக்கு வந்தோம். இங்கு சிறைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் சமூக பணிகள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டோம்’’ என்றனர். இந்நிகழ்வில், மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி, சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், சமூகவியல் கல்லூரி பேராசிரியர் மீனலோசினி மற்றும் சிறை காவலர்கள் உடனிருந்தனர்.

The post மத்திய சிறையை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள் சிறைவாசிகளுடன் பாட்டுப்பாடி உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Central Jail ,Madurai ,Tamil Nadu ,
× RELATED மதுரை மத்திய சிறையில் உள்ள விசாரணை...