×

கடும் பனி பொழிவுடன் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாரல் மழை

திருவாரூர், ஜன. 12:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் 3வது வாரத்தில் துவங்கி டிசம்பர் இறுதி வரையில் பெய்வது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் இந்த பருவ மழை என்பது முன்கூட்டியே துவங்கியது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 16ந்தேதி முதலே மாநிலம் முழுவதும் துவங்கி, மழை பெய்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

மேலும் வங்க கடலில் ஏற்பட்ட டிட்வா புயல் சின்னம் காரணமாகவும், சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளான நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் கடந்த நவம்பர் மாதம் 28 மற்றும் 29ந்தேதிகளில் இடைவிடாது தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. மேலும் இந்த மழை நீரானது பல்வேறு வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் அதனை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இது மட்டுமின்றி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த 2 நாட்களில் மட்டும் மாவட்ட முழுவதும் 66 கால்நடைகள் உயிரிழந்த நிலையில் 244 குடிசை வீடுகளும் சேதம் அடைந்தன. அதன்பின்னர் கடந்த மாதம் 2ந் தேதி மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. அதன் பின்னர் இந்த மழையானது தொடர்ந்து கனமழையாக இடைவிடாமல் மாவட்டம் முழுவதும் பெய்தது.

3 மணி நேரத்தில் மொத்தம் 446.6 மி.மீட்டர் மழை பதிவாகியது. அதன்பின்னர் மழை ஓய்ந்து பகல் நேரத்தில் மிதமான வெயிலும், இரவு நேரத்தில் கடும் பனி மற்றும் குளிரும் இருந்து வந்தது. இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை 5 மணி வரையில் மாவட்டம் முழுவதும் சாரல் மழையாக விட்டு விட்டு மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Tamil Nadu ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை