×

நிலையூர் கால்வாயில் தேங்கிய கழிவுகளை அகற்றிய விவசாயிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

திருப்பரங்குன்றம், டிச. 8: திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கால்வாயில் தண்ணீர் செல்ல தடையாக இருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை விவசாயிகள் 2 வது முறையாக அகற்றினர். திருப்பரங்குன்றம் அருகில் உள்ள நிலையூர் பெரிய கண்மாய். சுமார் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய்க்கும், இப்பகுதியில் உள்ள தென்கால் கண்மாய், விளாச்சேரி கண்மாய், வடிவேல்கரை கண்மாய், கிளானேரி கண்மாய், சேமட்டான்குளம், செங்குளம் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கும் வைகை ஆற்றில் இருந்து உபரி நீரை கொண்டு வர நிலையூர் கால்வாய் உள்ளது.

இந்த கால்வாய் திருப்பரங்குன்றம் மற்றும் திருநகருக்கு இடையே செல்கிறது. இந்த கால்வாயில் தற்போது தண்னீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கால்வாய் பராமரிப்பின்றி குப்பைகள் நிறைந்து கிடப்பதால் இப்பகுதியில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. இதுகுறித்து பொதுப்பணிதுறையிடம் பலமுறை இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்து வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் நிலையூர் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டபோது இப்பகுதி விவசாயிகள் கால்வாயில் இறங்கி அதில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இங்கு குப்பைகள் தேங்கி இருந்ததால் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டது. இதனால்இரண்டாவது முறையாக நேற்றும் விவசாயிகள் கால்வாயில் இறங்கி குப்பைகளை முழுமையாக அகற்றினர். அடுத்ததாக இந்த பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறையினருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நிலையூர் கால்வாயில் தேங்கிய கழிவுகளை அகற்றிய விவசாயிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirupparangunaram ,THIRUPARANGURAM ,Dinakaran ,
× RELATED வணக்கம் நலந்தானே!